200 ரொஹிங்கிய அகதிகளுடன் மிதக்கும் படகை மீட்க அழைப்பு

அந்தமான் கடல் பகுதியில் மிதந்துகொண்டிருக்கும் கடல் பயணத்துக்கு தகுதியற்ற படகொன்றில் நிர்க்கதியாகியுள்ள சுமார் 200 ரொஹிங்கிய அகதிகளை மீட்கும்படி தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 1ஆம் திகதி படகின் எஞ்சின் செயலிழந்தது தொடக்கம் தாய்லாந்து கடற்கரைக்கு அப்பால் இந்த ரொஹிங்கிய மக்கள் நிர்க்கதியாகி இருப்பதாக செய்தி கிடைத்துள்ளது என்று அந்த நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (08) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அந்தப் படகில் இருப்பவர்கள் சில நாட்களாக உணவு, குடிநீர் இன்றி இருப்பதோடு கடுமையாக நீரிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. உறுதி செய்யப்படாத சில தகவலின்படி படகில் இருந்த சிலர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக வெளியேற்றப்படாவிட்டால் எதிர்வரும் நாட்களில் மேலும் உயிரிழப்புகள் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி தொடக்கம் நவம்பர் வரையான காலத்தில் பெரும்பாலும் ரொஹிங்கியர் உட்பட சுமார் 1,920 பேர் மியன்மார் மற்றும் பங்களாதேஷில் இருந்து கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பயணங்களின்போது சுமார் 119 பேர் உயிரிழந்து அல்லது காணாமல்போயிருப்பதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.

பங்களாதேஷ் அகதி முகாமில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் குறைந்தது 3000 ரொஹிங்கிய அகதிகள் மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவை நோக்கி ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டதாக கொக்ஸ் பசாரில் உள்ள அகதி ஒருவரான அன்சார் அலி தெரிவித்துள்ளார்.

2017இல் மியன்மாரின் இராணுவ நடவடிக்கையை அடுத்து ஆயிரக்கணக்கான ரொஹிங்கியர்கள் அண்டை நாடான பங்களாதேஷுக்கு தப்பி வந்தனர். இவ்வாறு கொக்ஸ் பஸார் அகதி முகாமில் 1.2 மில்லிய ரொஹிங்கிய அகதிகள் வசிக்கின்றனர்.


Add new comment

Or log in with...