லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடரில் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி, கோல் கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி ஆரம்பப் போட்டியில் 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
3ஆவது எல்.பி.எல் தொடர் ஹம்பாந்தோட்டையில் நேற்று (06) ஆரம்பமானது. இதன் முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 137 ஓட்டங்களுக்கு சுருண்டது. சொஹைப் மலிக் மற்றும் துனித் வெல்லாலகே தலா 30 ஓட்டங்களை பெற்றனர்.
இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய கோல் கிளாடியேட்டர்ஸ் சார்பில் ஆரம்ப வீரரும் அணித்தலைவருமான குசல் மெண்டிஸ் 43 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் மத்திய வரிசையில் கோல் வீரர்கள் சோபிக்கத் தவறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 113 ஓட்டங்களுக்கு சுருண்டது. பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை பதம் பார்த்தார்.
லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் இரு தொடர்களிலும் ஜப்னா கிங்ஸ் அணியே சம்பியன் கிண்ணத்தை வென்றது. இதன் முதல் தொடரில் ஜப்னா ஸ்டலியன்ஸ் என்ற பெயரிலேயே அந்த அணி ஆடியது.
Add new comment