பயிற்சியாளர் பதவியை துறக்க மஹேல முடிவு

மும்பை இந்தியன்ஸின் உலகளாவிய செயல்திறன் தலைவராக பதவி உயர்வு பெற்ற இலங்கை முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன செளதெர்ன் பிரேவ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் செளதெர்ன் பிரேவ் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன செயற்பட்டு வந்தார்.

தொடர்ந்தும் அடுத்து நடைபெறவுள்ள பருவகாலங்களிலும் அவர் தலைமை பயிற்சியாளராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், வேலைப்பளு காரணமாக மஹேல ஜயவர்தன பதவியிலிருந்து விலகுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் கீழுள்ள அணிகள் ஐ.எல்.டி20 தொடர் மற்றும் எஸ்.ஏ டி20 லீக் போன்ற தொடர்களில் விளையாடவுள்ளன. இந்த அணிகளுக்கான பொறுப்புகள் மஹேல ஜயவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மஹேல ஜயவர்தன செளதெர்ன் பிரேவ் அணியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முதல் ஆண்டு செளதெர்ன் பிரேவ் அணி சம்பியனாக முடிசூடியிருந்ததுடன், இந்த ஆண்டு 7ஆவது இடத்தைப் பிடித்தது.

மஹேல ஜயவர்தன மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் செயற்பட்டுவருவதுடன், 3 தடவைகள் மும்பை அணி கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...