அதிரடி வெற்றியுடன் பிரேசில் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி

அடுத்து குரோசியாவுடன் மோதல்

தென் கொரியாவுக்கு எதிரான நொக் அவுட் சுற்று போட்டியில் 4–1 என்ற கோல் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியீட்டிய பிரேசில் அணி உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதியில் குரோசியாவுடன் மோதவுள்ளது.

குரோசிய அணி திங்கட்கிழமை நடந்த நொக் அவுட் போட்டியில் ஜப்பானை பெனால்டி சூட் அவுட் முறையில் 3–1 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி முழு நேரம் மற்றும் வழங்கப்பட்ட 30 நிமிட மேலதிக நேரத்தில் 1–1 என சமநிலை பெற்றிருந்தது.

முடிவை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் முறை பயன்படுத்தப்பட்டபோதும் ஜப்பானின் முதல் இரு உதைகளையும் தடுத்த குரோசிய கோல் காப்பாளர் டொமினிக் லிவகோவிச் தொடர்ந்து மற்றொரு பெனால்டி முயற்சியையும் முறியடித்தார்.

குரோசியா கடந்த உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டிவரை முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கட்டாரின் 674 அரங்கில் நேற்று (06) அதிகாலை நடைபெற்ற போட்டியில் பிரேசில் அணி முதல் பாதியிலேயே அடுத்தடுத்து நான்கு கோல்களை புகுத்தியது.

இதன்போதும் காயத்தின் பின் அணிக்குத் திரும்பிய நெய்மார் பெனால்டி உதவியுடன் கோல் புகுத்தினார். இது பிரேசில் அணிக்காக நெய்மார் பெறும் 76 ஆவது கோலாக இருந்ததோடு பிரேசில் சார்பில் அதிக கோல்கள் பெற்ற பீலேவின் சாதனையை சமன் செய்ய அவருக்கு இன்னும் ஒரு கோலே எஞ்சியுள்ளது.

இந்நிலையில் பிரேசில் மற்றும் குரோசிய அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டி வரும் வெள்ளிக்கிழமை (09) நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...