சர்வதேச பல்கலைக்கழகங்களை நிறுவுவது தொடர்பில் விசேட குழு

கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி ரணில் ஆலோசனை

பாராளுமன்றத்திலுள்ள முன்னாள் கல்வி அமைச்சர்கள், உயர் கல்வி அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களை இலங்கையில் நிறுவுவது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (06) நடைபெற்றது. இதன்போதே,

அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

நாட்டில் தற்போது பாரிய அந்நியச் செலாவணி பற்றாக்குறை நிலவுகிறது. இசந்தர்ப்பத்தில், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், ரஷ்யா, பெலாரஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு கல்விக்காக வருடாந்தம் சுமார் 30,000 மாணவர்கள் செல்கின்றனர். இவர்களது பெற்றோர் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உத்தியோகபூர்வமற்ற முறையிலேயே அவர்களுக்கான டொலரை அனுப்புகின்றனர். இவ்வாறு மாணவர்களின் கல்விக்காக வருடாந்தம் சுமார் 3 பில்லியன் டொலர் நாட்டிலிருந்து அனுப்பப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

மருந்து, எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்டவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள டொலர்களின் ஒரு பகுதியை இதற்காகவும் ஒதுக்க வேண்டியுள்ளது. உலகின் ஏனைய நாடுகள் அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ளும் ஒரு உத்தியாக கல்வியைப் பயன்படுத்துகின்றன. இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் அந்நாட்டு பல்கலைகழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இதன் போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். எனவே தான், சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உயர் பல்கலைக்கழகங்களை உள்நாட்டில் நிறுவுவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவ்வாறு சர்வதேச பல்கலைக்கழங்களை நிறுவுவதால், நாட்டிலிருந்து அனுப்பப்படும் டொலர் தொகை எஞ்சும் அதே வேளை, இலங்கை மாணவர்கள் மாத்திரமின்றி வெளிநாடுகளிலுள்ள மாணவர்களும் கல்விக்காக இங்கு வருகை தரக்கூடிய வாய்ப்புக்களும் ஏற்படும். இதனூடாக எமக்கு டொலர் வருமானம் கிடைக்கப்பெறும் என்றார்.


Add new comment

Or log in with...