க.பொ.த (சா.த) பெறுபேற்றில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு கல்வி வலயம் வலயக் கல்விப்பணிப்பாளருக்கு பாராட்டு

க. பொ. த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் அதன் பகுப்பாய்வுக்கு அமைய முதலாவது தடவை பரீட்சைக்குத் தோற்றி கணிதம், தமிழ்மொழி உட்பட 3 சி, 3 எஸ் பெறுபேறு 80.64 வீதத்தையும், க.பொ.த.உயர்தரத்திற்கு தகுதி பெற்றவர்கள் (1789) 87.01 வீதத்தையும்பெற்று மட்டக்களப்பு கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல்நிலையைப் பெற்றுள்ளது.

மேலும் 9 பாடங்களிலும் சித்தியடையத் தவறிய மாணவர் தொகை 07 (0.34வீதம்) ஆகும். இது தேசிய மட்டத்தில் மிகவும் குறைந்த மாணவர் தொகையாகும்

இதுவும் மட்டக்களப்பு கல்வி வலயம் தேசிய மட்டத்தில் பெற்றுள்ள வெற்றியாகும்.

வெளியான 2021 ஆம் ஆண்டுக்கான க. பொ.த சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் சிறந்த அடைவுமட்டத்தை அடைந்துள்ளதாக வலயக் கல்விப்பணிப்பாளார் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 2156 மாணவர்களில் 128 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 'ஏ' தர சித்திகளை பெற்றுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 80.64 வீதத்தினர் சித்தி வீதத்தினை அடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளார் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் இம்முறை க.பொ.த சாதாரண தரத்தில் வெற்றி பெறுவதற்கு வலய கல்விப் பணிமனையின் சிறந்த திட்டமிடலுடனான செயற்பாடே காரணம் என்று அதிபர்கள் தெரிவித்தனர்.

இந்த பெறுபேற்றையடுத்து மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமாரை சந்தித்த மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் தேசியமட்டத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதல் இடத்தினைப் பெற்றுக் கொண்டதற்காக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்த பெறுபேற்றை அடைவதற்கு மட்டக்களப்பு வலயக் கல்விப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தலைமையிலான மட்டக்களப்பு வலயக் கல்வியலுவலகம், கோட்டக் கல்விப்பணிப்பாளர்கள், அதன் உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஊழியர்கள் பெற்றோர் எனப் பலரும் பாராட்டுக்குரியவர்களாவர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தை தேசிய மட்டத்தில் முதல் இடத்துக் கொண்டு போய் நிறுத்தியுள்ள வலயக் கல்விப்பணிப்பாளர் சுஜாதாவின் முயற்சியையும் அர்ப்பணிப்பையும் மட்டக்களப்பிலுள்ள அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் மட்டக்களப்பு வலய கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்வி பணிப்பாளர் தேவரஜனி உதயகரன், மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் சிறந்த முறையில் கற்றல் செயற்பாடுகளை முன்கொண்டு சென்றதன் காரணமாக இந்த வெற்றியை பெற முடிந்ததாக குறிப்பிட்டார்.

 

எம்.எஸ்.எம்.நூர்தீன்

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...