ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆசனம்; இந்தியாவின் கோரிக்கைக்கு பிரிட்டன் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்தவர் ஆசனத்திற்கான இந்தியாவின் கோரிக்கைக்கு  பிரித்தானியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு சபையின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற அங்கத்தவர் ஆசனங்களை மேலும் விரிவுபடுத்துமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா, இந்தியா, ஜேர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளை உள்வாங்கும் வகையில் புதிய நிரந்தர அங்கத்தவர் ஆசனங்களை உருவாக்கவும் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வருடாந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐ.நா.வுக்கான பிரித்தானிய தூதுவர்  பார்பரா உட்வார்ட் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளதோடு, இந்தியாவுக்கு தமது நாட்டின் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 'இந்தியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்காகப் புதிய நிரந்தர உறுப்பினர் ஆசனங்களை உருவாக்கவும் சபையில் நிரந்தர ஆபிரிக்க பிரதிநிதித்துவத்திற்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம். எங்களது நிலைப்பாடு வெளிப்படையானது' என்று கூறியுள்ளார்.

ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் இவ்விவாதத்தில் உரையாற்றுகையில், 'பாதுகாப்பு சபையின் மறுசீரமைப்பு நீண்டகாலம் நிறுத்தப்பட்டதாக உள்ளது. இது அதன் பிரதிநிதித்துவத்தில் பாரிய பின்னடைவாக அமையும். பிரதிநிதித்துவம் என்பது அதன் சட்டபூர்வத்தன்மை மற்றும் செயல்திறனுக்கான தவிர்க்க முடியாத முன்நிபந்தனையாகும். அதனால் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இதை அடைய முடியாது. இன்றைய உலகளாவிய மோதல்களையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள உலகளாவிய சவால்களையும் திறம்பட நிர்வகிக்க இது சபைக்கு உதவும்' என்று குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...