மத்திய கிழக்கின் பழமைவாதங்களை களைந்தெறியுமா கட்டாரின் போக்குகள்?

மதத்தைப் பின்பற்றும் பழமை பேணும் பிராந்தியமாகவே மத்திய கிழக்கு நாடுகள் சில நூற்றாண்டுகளாக நோக்கப்பட்டன. மக்களால் தெரிவுசெய்யப்படாத மன்னராட்சி, பெண்களை முன்னுரிமைப்படுத்தாத பழமை பேணும் போக்கு, உண்ணல், மகிழல் மட்டும்தான் அரபுநாடுகளுக்கு அத்துப்படி. இப்படித்தான் இந்த மத்திய கிழக்கை மக்கள் நோக்கினர்.

இயற்கையின் அருட்கொடையான எண்ணெய் வளத்தை பயன்படுத்தத் தெரியாமல், மேலைத்தேயத்தின் மடியில் படுத்துறங்குவதாகவும் ஒரு காலத்தில் இந்நாடுகள் விமர்சிக்கப்பட்டன. வெளிநாடுகளிலிருந்து அதிகளவான தொழிலாளர்களை உள்ளீர்க்கும் மத்திய கிழக்கு, சுயமாக அறிவில் முன்னேறுவது எப்போது? முஸ்லிம் புத்திஜீவிகளிடம் மிக நீண்டகாலமாக இந்த ஆதங்கம் இருந்தது.

ஆயிரக்கணக்கான கியூபிக் லீற்றர் எண்ணெய்யைக் கொடுத்து பாஸ்மதி அரிசி மற்றும் உணவு வகைகளை இறக்குமதி செய்த காலமெல்லாம் இப்போது அங்கில்லை. இந்நிலைமைகள் படிப்படியாக நீங்கி வருகின்றன. தங்களிடமுள்ள இறைவனின் கொடையால்தான் உலகின் இலட்சக்கணக்கான மூலை முடுக்குகள் மற்றும் தெருக்களில் வாகனங்கள் ஓடுகின்றன. மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதில் விழிப்புற்று, சுய செயற்பாடுகள் மத்தியகிழக்கில் முடுக்கிவிடப்படுகின்றன. இதற்கு நல்லதொரு உதாரணம்தான் உலகக் கிண்ணத்துக்கான சர்வதேச உதைபந்தாட்ட போட்டிகள்.

இப்போட்டிகளை கட்டாரில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும் இந்த பழமை பேணுதல்களால்தான். தொழிலாளர்களை நடாத்தும் விதம், மனித உரிமை மீறல்கள், உஷ்ணமான காலநிலையைக் காரணங்காட்டியே, உலகக் கிண்ணப் போட்டியை கட்டாரில் நடாத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் உலகையே வியக்க வைத்துள்ளது.

ஒவ்வொன்றும் சுமார் அறுபதாயிரம் இருக்கைகளுள்ள நான்கு மைதானங்களில் 32 நாடுகள் மோதுகின்றன. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடாத்துவதற்கு அங்கீகாரம் கிடைத்தவுடனே மைதானங்களை நிர்மாணித்துவிட்டது கட்டார். பார்வையாளர்கள், ரசிகர்கள், ஆதரவாளர்கள் அலையெனப் படையெடுப்பதால் அரபு மண்ணே அதிர்கிறது. அயல் நாடுகளில் உள்ள எல்லைகளைத் திறந்து அங்குள்ள ஹோட்டல்களிலும் தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், 24 மணி நேரமும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் செயற்படுவதுடன், காவல் கண்காணிப்புக்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெருக்கடி, இட நெருக்கடிகளைக் குறைக்க அங்கு பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு தாயகம் அனுப்பப்படுகின்றனர். வீதிகளில் தக்க காரணமின்றி பயணிக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலதிகமாக 16,000 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல். பல தேசங்களிலிருந்தும் வந்துள்ளோர்களது விருப்பு, சுவை, தேவைகளையறிந்து உணவுகள் தயாரிப்பதற்கு சமையல் தயாரிப்பாளர்களும் தருவிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 20இல் ஆரம்பமான இப்போட்டிகள் டிசம்பர் 18 இல் முடிவடையும் வரைக்கும் கட்டார் மண் களைகட்டும்.

தென்கொரியா மற்றும் ஜப்பானில் நடந்த போட்டிகளுக்குப் பின்னர் ஆசிய நாட்டில் நடைபெறும் போட்டி இது. அதுவும் அரபு நாடொன்றில் முதல்முறையாக நடைபெறுகிறது. இதனால், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, அரபுலகில் பல விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய விரோத செயற்பாடுகளுக்கு கட்டார் இடமளித்துள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ள அரபு லீக், நேச நாடுகளின் ஆலோசனையைப் பொருட்படுத்தாமல் கட்டார் தன்னிச்சையாக நடந்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளது.

இதனால் அச்சமடைந்த கட்டார் திடீரென விளையாட்டரங்குகளில் மதுபான விற்பனைக்கு திடீர் தடைவிதித்தது. இதுபோன்ற, இஸ்லாமிய கலாசாரத்துடன் நேரடியாக முரண்படும் களியாட்டங்களை தவிர்க்கவும் கட்டார் தயாராகிறது. இதைக் கடைப்பிடிப்பதைப் பொறுத்தே அரபு லீக்குடனான கட்டாரின் நெருக்கம் தீர்மானிக்கப்பட உள்ளது.

மேலும், ஈரானின் உளவாளிகள் உள் நுழைந்து (சுன்னி) அரபு நாடுகளின் அந்தரங்கங்களை அறிந்துகொள்ள இப்போட்டிகள் வழியேற்படுத்தும் எனவும் சில அரபு நாடுகள் அஞ்சுகின்றன. பொருளாதார ரீதியில் கொள்ளை இலாபமீட்டும் கட்டார், பாதுகாப்பு விடயத்தில் கோட்டைவிட்ட கதையாக இருந்துவிடக் கூடாது. இதுதான், அயலிலுள்ள அரபு நாடுகளின் கவலை. ஏனைய நாடுகளின் எல்லைகள் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளதால், சவூதி அரேபியாவுக்கு இது ஆபத்தாக அமையாமல் இருந்தால் சரிதான்.

இத்தனை சவால்களுக்கு மத்தியில் நடாத்தப்படும் போட்டிகளால் ஈட்டப்படும் அந்நியச்செலாவணியின் ஒரு பங்கையாவது, ஏழை நாடுகளுக்கு, அதிலும் விஷேடமாக ஆபிரிக்காவிலுள்ள வறிய முஸ்லிம் நாடுகளுக்கு வழங்க கட்டார் முன்வர வேண்டுமென சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாடு கோரியுள்ளது. இவ்வளவு ஆவலாக ஏற்பாடுகளைச் செய்த கட்டார், முதலாவது போட்டியில் ஈக்குவடோருடன் தோற்றமைதான் இரட்டிப்புக் கவலை.

சவூதி அரேபியாவோ முதலாவது போட்டியிலே ஆர்ஜண்டீனாவை தோற்கடித்தமை அரபுலகை ஆச்சர்யத்திலாழ்த்தியது. இதனால், முழுநாள் விடுமுறையும் அங்கு வழங்கப்பட்டது. இதுமட்டுமா ஆச்சர்யம்! சவூதி அரேபிய வீரர்கள் சகலருக்கும் அதி நவீன ஆடம்பரக் கார்கள் (ரால்ஸ் ரொய்ஸ்) அந்நாட்டு மன்னரால் அன்பளிக்கப்பட்டதே ஆச்சர்யம்.

சுஐப் எம். காசிம்


Add new comment

Or log in with...