ஆய்வாளர் மர்ஹூம் மொஹிடீன் நினைவு நிகழ்வு அக்கரைப்பற்றில்

இலங்கையின் சிறந்த ஆய்வாளரும்,முற்போக்கு சிந்தனையாளரும் பன்னூலாசியரும், ஆவணக்காப்பாளருமான மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீன் காலமாகி ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றன.

அன்னாரை நினைவு கூரும் வகையில் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள மர்ஹூம் எம்.ஐ. எம். மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலைய கேட்போர் கூடத்தில் சமய நிகழ்வுகளும் நினைவுச் சொற்பொழிவுகளும் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எ. சிராஜ் மஷூர் உரையுடன் ஆரம்பமாகின.

'குர் ஆன்' ஒதும் நிகழ்வுகள் கிழக்கிலங்கை அரபுக்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர்அஷ் ஷேய்க் எ. ரயீஸ் முப்தி தலைமையில் நடைபெற்றன. அன்னாரின் நினைவுப்பேருரையை அக்கரைப்பற்று பட்டின ஜும்மாப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவரும், ஓய்வுபெற்ற கொத்தணி அதிபருமான எம்.ஏ. உதுமாலெப்பை நிகழ்த்தினார். அதிபர் திலகம் எம்.ஏ உதுமாலெப்பை பற்றிய அறிமுக உரையை ஏ எல்.சுஹைப் நிகழ்த்தினார். அதிபர் திலகம் உதுமாலெவ்வை தனது உரையில் அன்னாரின் ஆரம்பக் கல்வி, அவர் கற்ற பாடசாலைகள், பள்ளிப்பருவத்தில் அவர் காட்டிய திறமைகள், சாதனைகள் மற்றும் சமூக சேவை நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அவர் உத்தரவு பெற்ற நிலஅளவையாளராக தகைமை பெற்றார். அதைதொடர்ந்து வீடமைப்புத் திணைக்களத்தில் உதவிக் கட்டட வடிவமைப்பாளராக (Assistant Architect) பணியாற்றினார். பின்னர் ஸாம்பியாவிற்கு சென்று அங்கு 4 வருடங்கள் பணி புரிந்தார்.

அவர் அங்கு Chief Inspector of Building ஆகவும், Chief Land Surveyor ஆகவும் கடமையாற்றினார். இக்காலகட்டத்தில் அவரது காட்டிய விடாமுயற்சியின் காரணமாக Construction Survey Institute of London நடத்தும் பரீட்சையில் சித்தியடைந்து அதில் அங்கத்துவம் பெற்றார்.

மர்ஹூம் மொஹிடீன் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவது, தரவுகளைச் சேகரிப்பது, ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் காட்டியதாக குறிப்பிட்ட உதுமாலெப்பை, முஸ்லிம் சமூகம் தொடர்பான நூல்களை வெளியிட்டும், ஆய்வுகளை மேற்கொண்டும் உள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற கமநல பிரிவு உத்தியோகத்தர் எ.எம் ஜஹ்பரும் உரையாற்றினார். ஆளுநர் சபை தலைவர் ஜௌபர் இஸ்மாயிலின் சிறப்பு சொற்பொழிவு 'சூம்' தொழில் நுட்பமூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மர்ஹூம் எம்.ஐ எம். மொஹிடீன் ஆய்வு மற்றும்ஆவணப்படுத்தல் நிலையமும் அவரின் பெயரில் அவர் பிறந்த வீடு அமைந்துள்ள வீதியும் ஆளுநர் சபையின் தலைவர் ஜௌபர் இஸ்மாயிலினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அக்கரைப்பற்று பட்டின ஜும்மாப்பள்ளி வீதியில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் மர்ஹூம் எம்.ஐ எம். மொஹிடீனின் ஆய்வுக்கட்டுரைகள், தகவல் கணிப்பீடுகள், அவரது சிந்தனையில் உருவான கட்டட தொழில் நுட்பங்கள் , கருத்துக்கணிப்பீடுகள், அன்னார் கலந்து கொண்ட தேசிய, சர்வதேச ரீதியிலான பேச்சுகள் பற்றிய துணுக்குகள் போன்றன பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு அவை இறுவட்டு வடிவத்திலும் வைக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பிரத நிறைவேற்று அதிகாரி சிராஜ் மசூர் தெரிவித்தார்.

எம்.ஏ.பகுர்டீன்...

(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...