மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை இனப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது

தமிழ் தரப்பினர் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய காலம் இது

ஏற்கனவே,தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை, இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையப்போவதில்லை என்றும் தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டு சமஷ்டி முறை தீர்வை பெற்றுக் கொள்வதில் உறுதியாக செயற்பட வேண்டிய காலம் இது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பை தோற்றுவித்திருந்தார்.

இந்நிலையில்,தற்போது மாவட்ட அபிவிருத்தி சபை தொடர்பில் அவர்,தெரிவித்திருப்பது ஆச்சரியமூட்டுவ தாகவும் செல்வம் அடைக்கலநாதன் எம்,பி சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வர்த்தக, வாணிப அமைச்சு,கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்களுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சமஷ்டி முறையே இனப் பிரச்சினை தீர்வுக்கு சிறந்த முடிவாக முடியும்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தமிழ் தரப்பினர் முதலில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது அவசியம்.தமிழ் அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததே, தீர்வை இழுத்தடிப்பதாக அரசாங்கம் தெரிவிக்கும் நிலையை தமிழ் தரப்பினர் தோற்றுவிக்கக் கூடாதென்றும் அவர் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அவரது ஆட்சிக்காலத்தில் கவனம் செலுத்தாது சந்தர்ப்பத்தை தவற விட்டார்.

தற்போது மாவட்ட அபிவிருத்தி சபை பற்றி அவர் பேசுகிறார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் சாத்தியமான விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.

பிரதான எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை நோக்கி தீர்வு வழங்க தயாரா என கேள்வியும் எழுப்பினார்.பிரதான எதிர்க்கட்சிகளும் அதற்கு இணக்கம் தெரிவித்தன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் தொடர்பிலும் இணக்கம் தெரிவித்தார். .

சமஷ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில், தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி சபை பற்றி தற்போது குறிப்பிடப்படுகின்றமை அதிர்ச்சி யளிக்கிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...