அமரர் தெளிவத்தை ஜோசப் 40ஆம் நாள் நினைவு நிகழ்வு

- கொழும்பு-13 அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று விசேட பிரார்த்தனை

அமரர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் நாற்பதாம் நாள் நினைவு நிகழ்வுகள் இன்று (30 ஆம் திகதி) மாலை 6.00 மணிக்கு கொழும்பு_-13, அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெறுகின்றன. இன்று விஷேட பூஜை வழிபாடுகள் தேவாலயத்தில் நடைபெறுகின்றன. அவரது குடும்பத்தினராலும், நண்பர்களாலும் அன்னாரின் மறைவு இன்று அஞ்சலியுடன் நினைவுகூரப்படுகிறது.

தெளிவத்தை ஜோசப் அவர்களின் 58 சிறுகதைகளின் பெருந்தொகுதி மு.நித்தியானந்தன், எச்.எச்.விக்ரமசிங்க ஆகியோரின் முயற்சியில் விரைவில் தமிழகத்தில் வெளிவர இருக்கிறது.

சந்தனசாமிப்பிள்ளை_பரிபூரணம் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 16.02.1934 இல் பதுளை ஊவாக்கட்டவளை தோட்டத்தில் தெளிவத்தை ஜோசப் பிறந்தார். ஊவாக்கட்டவளை தோட்டப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த ஜோசப், தமிழ்நாட்டில் கும்பகோணம் Little Flower High School , பதுளை St.Bede's College ஆகிய பாடசாலைகளில் கல்வியைத் தொடர்ந்தார்.

தனது 22 ஆவது வயதில் தெளிவத்தை தோட்டப் பாடசாலை ஆசிரியராகவும், தோட்டத்து எழுதுவினைஞராகவும் இணைந்த பதவியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். அறுபதுகளில் எழுத்துலகில் பிரவேசித்த ஜோசப், தான் தொழில்புரிந்த தெளிவத்தை என்ற தோட்டப்பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டார்.

1964 இல் கொழும்பில் Star Toffee தயாரிப்பு நிறுவனமான Modern Confectionary Works இல் கணக்காளராகப் பணியாற்றினார்.

வீரகேசரி நடத்திய மலையகச் சிறுகதைப் போட்டியில் தனது 'பாட்டி சொன்ன கதை' என்ற சிறுகதைக்காக 1963 இல் முதலாம் இடத்தைப் பெற்றார். 1965 இல் 'பழம் விழுந்தது' என்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றார். பாலாயி(கதம்பம்_1966), ஞாயிறு வந்தது (கலைமகள்_1966), மனம் வெளுக்க...(தினகரன்_1969) ஆகிய ஜோசப்பின் மூன்று குறுநாவல்கள் 'பாலாயி' என்ற தலைப்பில் துரைவி வெளியீடாக 1993 இல் வெளியாகின.

'நாமிருக்கும் நாடே' என்ற தலைப்பில் மு.நித்தியானந்தன் பதிப்பித்து வைகறை வெளியீடாக வெளிவந்த ஜோசப்பின் சிறுகதைத்தொகுப்பு 1979 ஆம் ஆண்டிற்கான சாகித்ய பரிசினைப் பெற்றது. ஜெயமோகன் தொகுத்து, நற்றிணைப்பதிப்பக வெளியீடாக 'மீன்கள்' என்ற தொகுப்பு 2013இல் தமிழகத்தில் வெளியானது. மல்லியப்புசந்தி திலகர் தொகுப்பில் பாக்யா பதிப்பக வெளியீடாக 'தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்' 2014 இல் வெளியாகின.

மித்திரன் பத்திரிகையில் 1967 இல் வெளியான 'காதலினால் அல்ல' என்ற நாவல் நூல் வடிவம் பெறவில்லை. தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள் சாவதில்லை' (வீரகேசரி வெளியீடு_1974), 'குடைநிழல்' (கொடகே வெளியீடு_2010), 'நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்' (பாக்யா பதிப்பகம்_ 2016) ஆகியன தெளிவத்தை ஜோசப்பின் நூல் வடிவம் பெற்ற நாவல்களாகும்.

துரைவி வெளியீடாகப் பிரசுரமான தெளிவத்தை ஜோசப்பின் 'மலையகச் சிறுகதை வரலாறு' (2000) சம்பந்தன் விருது பெற்றது. அவர் எழுதிய 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இதழியலும் இலக்கியமும்', 'மலையக நாவல்- வரலாறும் வளர்ச்சியும்' ஆகிய ஆராய்ச்சி நூல்கள் இன்னும் நூலுருப் பெறவில்லை.

இலங்கை அரசின் சாஹித்ய விருது, சம்பந்தன் விருது, விஷ்ணுபுரம் விருது, கலாபூஷணம், சாகித்ய ரத்னா ஆகிய உயர்விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். அவர் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று சிறந்த அங்கீகாரம் பெற்றவராவார். இனிய பண்பினால் மிகப்பரந்த இலக்கிய நண்பர்களைக் கொண்டவராக அவர் திகழ்ந்தார்.

அவரது துணைவியார் பிலோமினா ஷரூபௌா ஆவார். திரேசா, தோமஸ் ரமேஸ், ரவீந்திரன்,சியாமளா ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.

தனது 88 ஆவது வயதில் கொழும்பில் 21 ஒக்டோபர் 2022 இல் ஈழத்தின் இலக்கிய பெருஞ்சுடர் அணைந்தது.

எச்.எச். விக்ரமசிங்க...


Add new comment

Or log in with...