நியதிகளுக்கு முரணாக வெளிநாடு செல்லும் வைத்தியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் முடிவு - சுகாதார அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு

சுகாதார அமைச்சின் நியதிகளுக்கு முரணாக வெளிநாடுகளுக்கு செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்களின் வழிகாட்டல் அறிவுறுத்தல்களுக்கு முரணாக நாட்டை விட்டு வெளியேறும் டாக்டர்களுக்கே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென சபையில் தெரிவித்த அமைச்சர், அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவரென்றும்

தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27இன் கீழ் 02இல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

நாட்டில் நிலவும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சுகாதார சேவைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் குறிப்பிடும் போது உயிர்காக்கும் 14 வகையான அத்தியாவசிய மருந்து இறக்குமதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 948 அத்தியாவசிய மருந்து பொருட்கள் தேவையானளவு கையிருப்பிலுள்ளன.

வெளிநாட்டு சந்தையில் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மாதாந்தம் 2.5 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

அத்துடன் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக மாதாந்தம் பில்லியன் கணக்கான நிதி செலவிடப்படுகிறது.

வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் கடந்த மாதங்களில் மருந்துப் பொருட்கள் கொள்வனவு மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. எனினும் தற்போது நிலைமை முகாமைத்துவம் செய்யப்பட்டு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மருந்துப் பொருட்கள் தாமதமின்றி இறக்குமதி செய்யப்படுகின்றன. ஐந்து வருட காலத்துக்கு வெளிநாடுளுக்கு செல்ல முடியுமென பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டது. இதுவரையான காலப்பகுதியில் 300 டாக்டர்கள் மற்றும் சுகாதார சேவையாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

ஒரு டாக்டர் வெளிநாடு செல்லும் போது அவரது சேவை வெற்றிடம் முழுமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான வழிகாட்டல் ஆலோசனையை சுகாதாரத்துறை அமைச்சு வழங்கியுள்ளது.

ஒருசில மருத்துவர்கள் முறையான வழிமுறைகளை பின்பற்றி வெளிநாடு சென்றுள்ளார்கள்.

சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள ஆலோசனை அறிவுறுத்தல்களுக்கு முரணாக வெளிநாடு செல்லும் டாக்டர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் வெளிநாடுகளில் மருத்துவ சேவையில் ஈடுப்படுவதற்கும் தடையேற்படுத்தப்படும்.

அதேவேளை சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாமல் டாக்டர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு அறிவிக்கவும்,வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது விமான நிலையத்தில் அவர்களின் விடுமுறை தொடர்பான பத்திரங்களை ஆராயுமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

 லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...