ஸ்ரீல.சுதந்திர கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும்

மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்க

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

லோரன்ஸ் செல்வநாயகம்

மாகாணசபைகளின் அதிகாரத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக மாவட்ட ரீதியில் அதிகாரங்களைப் பகிர முடியுமென்றும் அதற்காக மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் இந்த கூற்றுக்கு சபையில் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

அவ்வாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அதன் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுகாதார அமைச்சு, புத்த சாசன மற்றும் சமய அலுவல்களுக்கான அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எனது ஆட்சிக் காலத்தில் வடக்கில் தமிழ் மக்களின் 95 சதவீதத்துக்கும் அதிகமான காணிகளை நான் விடுவித்துள்ளேன். இன்னும் சிறியளவிலான காணிகளே விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்து ஆலயங்கள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.

இப்பிரச்சினையை அமைதியான முறையில் கலந்துரையாடி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது புதிதாக எழுந்துள்ள பிரச்சனை அல்ல நீண்ட கால பிரச்சினை ஆகும்.

ஆயுதங்களை உற்பத்தி செய்யும் பாரிய நிறுவனங்களுக்கு மக்களை அழிக்க வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக கலந்துரையாடித் தீர்க்க வேண்டும்.

பராக்கிரமபாகு மன்னன் நாட்டில் விஹாரைகளை அமைக்கும்போது கூடவே ஆலயங்களையும் அருகில் அமைத்தார். அப்போது தமிழ் சிங்கள, முஸ்லிம் பிரச்சினைகள் இருக்கவில்லை.

மாகாணசபைகளின் அதிகாரத்தை அதிகரிப்பு தொடர்பில் நீண்ட காலமாகப் பேசப்படுகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாகாணசபைகளுக்குக் கீழ் மாவட்ட ரீதியில் அதிகாரங்களைப் பகிர முடியும் என்ற யோசனையை முன் வைத்துள்ளது. மாவட்ட அபிவிருத்தி சபை முறையில் அதிகாரங்களைப் பகிர முடியும்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மாவட்ட அபிவிருத்தி அதிகார சபைமுறையை அமுல்படுத்த தேர்தலை நடத்தினார்.

இதன்போதே யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. ரயிலில் சென்றவர்கள் வாக்குப் பெட்டிகளை கடலில் வீசினார்கள். பண்டாரநாயக்கவின் தனிச் சிங்கள சட்டத்தால் ஏற்பட்டப் பிரச்சினைகளின் பின்னர் பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அதனை பௌத்த பிக்குகள் எதிர்த்தனர். அதன்போது பண்டாரநாயக்கவினாலேயே அந்த ஒப்பந்தம் எரிக்கப்பட்டது.

நாடு மிகவும் கடினமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் பிரச்சினைகள் அதிகாரிகள் மட்டத்திலேயே பேசி தீர்க்கப்பட வேண்டும் அவை தொடரக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...