- முதல் தடவை தோற்றியவர்களில் 74.52% பேர் சித்தி
- 6,566 பேர் 6 பாடங்களிலும் சித்தியடையவில்லை
- நாடு முழுவதும் 10,863 பேருக்கு 9 A
2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை பரீட்சார்த்திகளில் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 (231,982) பேர் க.பொ.த. உயர் தரத்தில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (25) வெளியிடப்பட்ட இப்பெறுபேறுகள் தொடர்பில் நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2021 க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு மொத்தமாக 5 இலட்சத்து 18 ஆயிரத்து 245 (518,245) பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4 இலட்சத்து 77 ஆயிரத்து 85 (477,085) பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 460 (110,460) பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.
பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை பரீட்சார்த்திகளில்
ஒரு பாடத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோற்றியவர்கள் 311,553 பேர்
5 அல்லது அதற்கு அதிகமான பாடங்களில் தோற்றியோர் 311,321 பேர்
இவர்களில் 231,982 பேர் க.பொ.த. உயர் தரத்தில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். அதற்கமைய முதல் தடவை (பாடசாலை ரீதியாக) தோற்றிய மாணவர்களில் 74.52% பேர் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
6 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கு தோற்றியவர்களில் 6,566 பேர் 6 பாடங்களிலும் சித்தியடையவில்லை என அவர் தெரிவித்தார். இது மொத்த பாடசாலை பரீட்சார்த்திகளில் 2.11% ஆகும்.
அத்துடன் அனைத்து பாடங்களிலும் (9 A) முதற் தர சித்தி பெற்ற மாணவர்கள் 10,863 பேர் என அவர் தெரிவித்தார்.
மேலும், 498 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வட மாகாணத்தில் இருந்து 16 ஆயிரத்து 564 (16,564) மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில், அதில் 551 மாணவர்கள் 9 A சித்தியை பெற்றுள்ளனர்.
இதில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 3 ஆயிரத்து 9 (3,009) மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 193 மாணவர்கள் 9 A சித்தியை பெற்றுள்ளனர்.
மேலும் 9A சித்தியை வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 56 பேர், வடமராட்சி கல்வி வலயத்தில் 56 பேர், வலிகாமம் கல்வி வலயத்தில் 53 பேர், கிளிநொச்சி கல்வி வலயத்தில் பேர், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பேர், மன்னார் கல்வி வலயத்தில் பேர், தென்மராட்சி கல்வி வலயத்தில் 36 பேர், வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 12 பேர், துணுக்காய் கல்வி வலயத்தில் 9 பேர், தீவக கல்வி வலயத்தில் ஒருவர் பெற்றுள்ளனர்.
2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; பெறுபேறு; மீளாய்வு உள்ளிட்ட மேலதிக தகவல்கள்
2021 க.பொ.த. சாதராண தரப் பரீட்சைகள் இவ்வருடம் (2022) மே 23ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 01ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.
குறித்த பரீட்சைக்கு,
பாடசாலை பரீட்சார்த்திகள் - 477,085 பேர்
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் - 110,460 பேர்
உள்ளிட்ட 518,245 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
நாடு முழுவதிலும் உள்ள 542 இணைப்பு நிலையங்களுடன் இணைந்தவாறு, 3,845 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் இடம்பெற்றிருந்தன.
பெறுபேறுகளை தரவிறக்கம் செய்தல்
அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும், விண்ணப்பங்களை அனுப்பும்போது, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name), கடவுச்சொல் (Password) மூலம், உரிய பாடசாலையின் பெறுபேறுகளை தரவிறக்கி பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இது தொடர்பான பயனர்பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) மூலம் குறித்த மாகாண மற்றும் வலய பெறுபேறுகளை தரவிறக்கம் செய்து பெற்றுள் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பேறுபேறகள், எதிர்வரும் நாட்களில் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நடவடிக்கைகளுக்காக பெறுபேற்று சான்றிதழ்களை நவம்பர் 28ஆம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகளின் மீளாய்வு
க.பொ.த. (சா/த) பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அவசியமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
உடனடி தொலைபேசி: 1911
பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறு கிளை: 0112785922, 0112784537, 0112786616, 0112784208
கையடக்க தொலைபேசிகளில் பெறுபேறுகளை பெற...
Exams ஒரு இடைவெளி சுட்டிலக்கத்தை டைப் செய்து உரிய வலையமைப்பின் அடிப்படையில் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
Airtel - 7545
Dialog - 7777
Etisalat - 3926
Mobitel - 8884
Hutch - 8888
Add new comment