அமைதி ஆர்ப்பாட்டத்தை தடுத்தனர்; பொலிஸ் அதிகாரிகள் மீதான முறைப்பாடு தள்ளுபடி

- எதிர்த்து மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு

கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் வீதித்தடைகளை ஏற்படுத்தியதாக தெரிவித்து இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தனிப்பட்ட முறைப்பாடு இன்றையதினம் (25) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் திலிண கமகே குறித்த நடவடிக்கையை எடுத்தார்.

இம்முறைப்பாடு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நளீன் தில்ருக் ஆகியோருக்கு எதிராக, செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்தனவினால் குறித்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு கடந்த நவம்பர் 08 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, தமது ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

முறைப்பாட்டாளரால் உள்ளடக்கம் மறைக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட முறைப்பாட்டைத் தாக்கல் செய்வதற்கு சட்ட மா அதிபரின் அனுமதி அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரெக்ஸ் எதிர் மீரா சைபோ (Rex v Meera Saibo) வழக்கில் முறைப்பாட்டாளரால் நீதிமன்றம் வேண்டுமென்றே தவறாக வழிநடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியற்று நடக்கவும் இல்லை. சட்டவிரோதமாக ஒன்றுகூடவும் இல்லை என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றையதினம் (25) இம்முறைப்பாடு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மாஅதிபரின் நிலைப்பாடு சரியானது எனத் தெரிவித்த நீதவான், பொலிஸ் அதிகாரிகள் சட்டபூர்வமாக செயல்பட்டு தங்கள் கடமையை மேற்கொண்டுள்ளதோடு, பி அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

அதற்கமைய, சட்ட மாஅதிபரின் அனுமதி கோராமை இம்முறைப்பாட்டின் மிகப் பாரிய சட்ட குளறுபடி என அறிவித்த நீதவான், சட்ட மாஅதிபரின் வாதத்திற்கு அமைய இம்முறைப்பாட்டை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

இதேவேளை குறித்த உத்தரவை மாற்றுமாறு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, தரிந்து ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...