இலங்கை தேயிலைக்கான கேள்வி உயர்வடைந்தே காணப்படுகிறது

பொய்யான அறிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்

இலங்கை தேயிலை சபை அறிவிப்பு

சவால்கள் நிறைந்த சூழலிலும் இலங்கை தேயிலைக்கான கேள்வி உயர்வடைந்துள்ளது. தேயிலை தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிட கூடிய தகுதிவாய்ந்த நிறுவனமாக தேயிலை சபை விளங்குவதால்,பொய்யான தகவல்களை கொண்ட அறிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டாம் என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

அண்மை காலங்களில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பானது பின்னோக்கி மறைபெறுமானத்துக்குச் சென்றுள்ளதாக வெளியிடப்படும் செய்திகளால் இத்துறை பாதிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கை தேயிலை சபையின் தவிசாளர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.

தேயிலை தொழில் துறையில் சிறு சரிவை நாம் சந்தித்திருப்பது உண்மை தான். அது உற்பத்தி செலவு மற்றும் கொரேனா பரவல்,பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டவையாகும். ஆனாலும் எமது தேயிலை பிரத்தியேகமான சுவை, நறுமணம் மற்றும் பசுமை போன்றவற்றுக்காக புகழ்பெற்றுள்ளதால் எமது தேயிலையின் கேள்வி குறைவடையவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

நடப்பு ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் வளர்ச்சியை இலங்கை தேயிலை சபை எதிர்பார்க்கின்றது. 2023 ஆம் ஆண்டுக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தேயிலை உற்பத்தி 290 மில்லியன் கிலோகிராம்களாகும்.அத்தோடு ஏற்றுமதி வருமானம் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வளர்ச்சியடையும் என எதிபார்க்கப்படுகின்றது.

சந்தை நிலவரங்கள் மற்றும் மாற்றங்களை நேர்த்தியான வகையில் இலங்கை தேயிலை சபை மீளாய்வு செய்வதுடன், இலங்கை தேயிலையின் தரம் தொடர்பான கீர்த்தி நாமத்தைப் பேணுவதற்கான புத்தாக்கமான வழிமுறைகளையும் ஏற்படுத்த உத்தேசித்துள்ளதாக அச்சபையின் தலைவர் மேலும் கூறினார்.

2013 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வருடாந்த தேயிலை உற்பத்தி 340 மில்லியன் கிலோகிராம் எனும் சாதனைப் பெறுமதியை எய்தியிருந்தது. 2017 முதல் 2019 வரையான காலப் பகுதியில் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தாலும் 2020 ஆம் ஆண்டில் தொற்றுப் பரவல் காரணமாக தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.

தொழிற்துறையைச் சேர்ந்த சகல பங்காளர்களான -செய்கையாளர்கள், உற்பத்தியாளர்கள். தயாரிப்பாளர்கள், முகவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பல தடைகளுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், உற்பத்தியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியது. எவ்வாறாயினும், தேசிய பொருளாதாரத்துக்கு இந்தத் தொழிற்துறையின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. இந்தத் துறையின் மீட்சிகரமான செயற்பாடு என்பது, நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அத்தியாவசியமானதாக அமைந்திருப்பதுடன், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான வெளியக நிதியை திரட்டிக் கொள்வதிலும் பங்களிப்புச் செலுத்தும்.

இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மதிப்பிறக்கம், தேயிலைக்கான தட்டுப்பாடு, விற்பனை அதிகரிப்பு மற்றும் ஏல விலைகள் அதிகரிப்பு போன்றவற்றின் காரணத்தால் மார்ச் மாதம் முதல் தேயிலை விலை சடுதியாக அதிகரித்திருந்தது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் நிலவிய போதிலும், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் சிறுதோட்டச் செய்கையாளர்களால், வருடம் முழுவதிலும் தேயிலைச் செய்கையை மேற்கொள்ள முடிந்திருந்தது. 2020 மற்றும் 2021 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 ஜுலை மாதம் முதல் பங்காளர்களுக்கான தேயிலை விலை பெருமளவு அதிகரித்துள்ளது. தாழ் நிலச் செய்கைப் பிரிவில், சிறு தோட்டச் செய்கையாளர்கள் 2, - 3 வருட காலப் பகுதிக்கு முன்னர் பெற்ற கிலோகிராம் ஒன்றுக்கான ரூ. 90 எனும் விலையுடன் ஒப்பிடுகையில் தற்போது ரூ. 265, 300 வரையான விலையைப் பெறுகின்றனர் என இலங்கை தேயிலைச் சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ


Add new comment

Or log in with...