குரோசிய ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியது மொரோக்கோ

கடந்த உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய குரோசியா மொரோக்கோவுக்கு எதிராக கோலின்றி சமநிலையுடன் இம்முறை உலகக் கிண்ணத்தை ஆரம்பித்துள்ளது.

அல் பைத் அரங்கில் எப் குழுவுக்காக நேற்று (23) நடைபெற்ற இந்தப் போட்டியில் 2018 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற குரோசிய அணியின் நான்கு வீரர்கள் மாத்திரமே இடம்பெற்றிருந்தனர்.

மந்தமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய குரோசியா சார்பில் நிகொலஸ் விளாசியக்கின் கோல் முயற்சி ஒன்று நூலிழையில் தவறியது.

எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொரோக்கோ தெளிவான கோல் வாய்ப்புகளைப் பெறத் தவறியது.

உலகத் தரவரிசையில் 12ஆவது இடத்தில் இருக்கும் குரோசியா போட்டியின் பெரும்பாலான நேரம் பந்தை தன் வசம் வைத்திருந்தபோதும் மொரோக்கோ அரணை முறியடித்து கோல் வாய்ப்புகளை பெறுவதில் தோல்வி அடைந்தது.

இதன்படி இம்முறை உலகக் கிண்ணத்தில் கோலின்றி சமநிலையாகும் மூன்றாவது போட்டியாக இந்த ஆட்டம் பதிவாகியுள்ளது.

முன்னதாக டென்மார்க் - துனீசியா மற்றும் போலந்து – மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இவ்வாறு சமநிலையுற்றன. 2018இல் ரஷ்யாவில் நடந்த ஒட்டுமொத்த உலகக் கிண்ண போட்டிகளிலும் ஒரே ஒரு ஆட்டமே கோலின்றி சமநிலையுற்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...