பிரான்ஸ் இலகு வெற்றி

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் நடப்புச் சம்பியன் பிரான்ஸ் அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 4–1 கோல் கணக்கில் இலகு வெற்றியீட்டியது. போலந்து–மெக்சிகோ மற்றும் துனீஷியா–டென்மார்க் அணிகளுக்கு இடையிலாக போட்டிகள் கோலின்றி சமநிலையுற்றன.

அல் ஜனூப் அரங்கில் இலங்கை நேரப்படி நேற்று (23) அதிகாலை இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தியபோதும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் நான்கு கோல்களை பெற்றது.

இரட்டை கோல் பெற்ற ஒலிவியர் ஜிரோட் பிரான்ஸ் தேசிய அணிக்காக அதிக கோல்கள் பெற்ற தியரி ஹென்ரியின் (51) சாதனையை சமப்படுத்தினார்.

முன்னதாக சி குழுவுக்காக நடைபெற்ற போட்டியில் போலந்து அணி பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட நிலையில் மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டம் சமநிலையானது. 58ஆவது நிமிடத்தில் ரொபர்ட் லொவன்டோஸ்கியின் பெனல்டி உதையை மெக்சிகோ கோல்காப்பாளர் தடுத்தார்.

பரபரப்பாக நடைபெற்ற துனீசியா மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையிலான டி குழு போட்டியிலும் பல கோல் முயற்சிகள் தவறிய நிலையில் சமநிலை பெற்றது.


Add new comment

Or log in with...