நிந்தவூரில் கலப்பட பசளை தயாரிப்பு நிலையம் சுற்றி வளைப்பு; பணியாளர்கள் கைது

- விற்பனைக்குத் தயாராகவிருந்த 181 கலப்பட உரப்பொதிகள் மீட்பு
- உலர வைத்த உப்புடன் கையும் களவுமாக சிக்கின

நிந்தவூர் அட்டப்பள்ள பிரதேசத்தில் உள்ள கல்முனையைச்சேர்ந்த ஒருவரின் அரிசி ஆலையொன்றில், பசளையுடன் உப்புக்கலந்து விற்பனை செய்யப்படவிருந்த கலப்படப்பசளைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்றைய தினம் (24) இராணுவ புலனாய்வுப்பிரிவு மற்றும் திருக்கோவில் விஷேட அதிரடிப்படையினரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதில் சிவப்பு நிற MOP பசளைகளை உப்புடன் கலந்து விற்பனை செய்வதற்கு, உப்பினை உலர வைத்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே புலனாய்வுப்பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதில் உப்பு கலக்கப்படாத 50 கிலோ பொதி கொண்ட 92 MOP பசளை பொதிகளும், உப்புக்கலப்படம் செய்து விற்பனைக்குத் தயாராகவிருந்த 181 பொதிகளும் கைப்பற்றப்பட்டதுடன், உற்பத்தி செய்யப்படும் நிலையிலிருந்த சுமார் 150 இற்கும் அதிகமான பைகள் மதிக்கத்தக்க உப்பு மற்றும் MOP பசளை கலந்த குவியல்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், உலர வைக்கப்பட்டுள்ள உப்பு மற்றும் MOP பசளைகளிலிருந்து சராசரியாக 500 பொதிகள் பொதியிட முடியும் எனவும் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை விற்பனை செய்யப்படவிருந்த சில பொதிகளில் அரச இலட்சினை பொறிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் இந்தக் கலப்பட வேலையில்  பணிக்கமர்த்தப்பட்டுள்ளவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

(நிந்தவூர் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...