உலக பசுமை பொருளாதார அமைப்பின் ஆதரவை கோருகிறார் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்

எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெற்ற COP27 காலநிலை உச்சிமாநாட்டின் நிகழ்வுகளுடன் இணைந்ததாக, UAE ஐ தளமாக கொண்டு இயங்கும் உலக பசுமைப் பொருளாதார அமைப்பின் (WGEO) சிரேஷ்ட அதிகாரிகளை சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் சந்தித்துள்ளார்.

COP27 மாநாட்டு அரங்கின் UAE வளாகத்தில் WGEO இன் பணிப்பாளர் நாயகம் அப்துல் ரஹீம் சுல்தானுடன் இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த ஆண்டு செப்டம்பரில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெற்ற 8 ஆவது உலக பசுமைப் பொருளாதார உச்சிமாநாட்டில் (WGES) நடைபெற்ற அமைச்சர்கள் மட்ட வட்டமேசை பேச்சுவாத்தையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொண்டதோடு, பசுமைப் பொருளாதாரம் தொடர்பான உலகளாவிய கூட்டணிக்கு இலங்கை அரசாங்கம் அதன் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

2022 உலக பசுமைப் பொருளாதார உச்சிமாநாட்டுக்கு இணங்க, இலங்கை அரசாங்கம் பசுமைப் பொருளாதாரம் தொடர்பான உலகளாவிய கூட்டமைப்பிற்கு தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளதோடு, காலநிலை மாற்ற நடவடிக்கைகளை நோக்கிய இலங்கையின் பயணத்தை மேலும் ஆதவளிப்பதற்காக, WGEO இனால் சாத்தியமான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான நான்கு முக்கிய பிரதான துறைகளை WGEO இன் பணிப்பாளர் நாயகத்திடம், அமைச்சர் அஹமட் முன்வைத்துள்ளார்.

அவையாவன;

  1. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக விருத்தியடைந்துவரும் இலங்கை வீதி வரைபடத்தை அமுல்படுத்துவதற்கு நிதிசார் ஆதரவு தேவைப்படும்.
  2. நவீன தொழில்நுட்பங்களுடனும் அனுபவத்துடனும் அரச மற்றும் அரச சார்பற்ற துறைகள் இரண்டிற்கும் கட்டமைக்கப்பட்ட திறன் கட்டியெழுப்புகை நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்தல்.
  3. இலங்கையை பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி மாற்றுவதற்கான உத்திகளைக் கண்டறிய உதவக்கூடிய பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத நிபுணர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளது.
  4. இருதரப்பு ரீதியாகவும் சாத்தியமான வகையிலும் குறிப்பான அபிவிருத்தித் திட்டங்கள் அடையாளம் காணப்பட வேண்டும். கருத்திட்டங்களை வினைத்திறன்மிக்கதாக அமுல்படுத்துவதற்கு கருத்திட்ட நிதியிடல் ஆதரவும் தேவைப்படும்.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், இலங்கையின் பசுமை மாறுதல் செயன்முறைக்கு ஆதரவாக WGEO இன் நிதிசார் மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் கலந்துரையாடினார். இலங்கையின் மேற்கூறிய குறிப்பிட்ட தேவைகளுக்கு பணிப்பாளர் நாயகம் சுல்தான் சாதகமாக பதிலளித்ததுடன், 2023 ஆம் ஆண்டு தொடங்கும் WGEO இன் எதிர்வரும் வரவு செலவுத் திட்ட சுற்றில் அவைகளை உள்வாங்கவும் இணக்கம் தெரிவித்தார். 2023 இல் ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் அடுத்த காலநிலை மாற்ற மாநாடு முன்னதாக ஆரம்பிக்கப்படவுள்ள இணைந்த நிகழ்ச்சித்திட்டங்களுக்கான தனது எதிர்பார்ப்புகளை அமைச்சர் அஹமட் வெளிப்படுத்தினார்.

உலக பசுமைப் பொருளாதார அமைப்பு (WGEO) என்பது, பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கி பசுமைப் பொருளாதாரம் எப்படி, ஏன் உலகின் சிறந்த பாதையாக அமையும் என்பது தொடர்பான முன்னேற்றத்தைத் தூண்டுவதற்கான முழுமையான அணுகுமுறைக்கான சர்வதேச சமூகத்தின் அழைப்புகளுக்கு ஒரு விரிவான பதிலளிப்பாகும்.

உலக பசுமைப் பொருளாதார அமைப்பின் தலைமை அலுவலகம் (WGEO) ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் அமைந்துள்ளது.


Add new comment

Or log in with...