'சித்தரமிர்தம்' வெளிவருவது முப்பெரும் சித்தர்களின் அருளாசி எமது மக்களுக்கு கிடைப்பதற்கான அறிகுறி

ஸ்ரீ ஸ்ரீ காகபுஜண்டரின் அவதாரமான ஸ்ரீ தலையாட்டிச் சித்தர் பெருமானின் சீடரான அன்னைச் சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் திருவடிகளைச் சரணடைகின்றேன். அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்னும் சமரச சுத்த சன்மார்க்க மகாமந்திரத்தை உலகெங்கும் ஒலிக்கச் செய்த ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் வள்ளலாரைப் போல், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி ஒரு கோடிப்பேருக்கு மேல் தன் அட்சயக் கரத்தால் உணவளித்து பிரம்மரிஷி மலையில் மகாசமாதியடைந்த அன்னைச் சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் குருவருளினால் திருவருள் கூடி இன்னுமொரு புனித கைங்கரியத்தில் அடியேனும் கருவியாக உள்ளேன்.

கவியரங்கானது கவிமாமணி கலா. விஸ்வநாதனின் அறிமுகத்தை மீண்டும் தந்தது. தேரடிச் சித்தர் யோகர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளும் மகாவாக்கியங்களுக்கும் சித்தரமிர்தத்திற்கும் தொடர்பிருப்பதாகவே எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

நாவலப்பிட்டி குயின்பெரியில் ஜீவசமாதியான நவநாத சித்தர், கொழும்பு முகத்துவாரத்தில் மகாசமாதியான பெருஞ்சித்தர் பெரியானைக் குட்டி சுவாமிகள், செல்வத்தில் பிறந்து அனைத்தையும் துறந்து அம்பாறை காரைதீவில் சித்தியடைந்த சித்தானைக் குட்டிசுவாமிகள் என்ற மூன்று சித்தர்பெருமக்களும் இலங்கை வரைபடத்தில் முக்கோணப் புள்ளிகளாக இருந்து சிவபூமியாம் இலங்கையையும் அதன் மக்களையும் இற்றைவரை காத்து வருகின்றனர்.

'சித்தரமிர்தம்' வெளிவருவதே பெரியானைக் குட்டி உள்ளிட்ட முப்பெரும் சித்தர்கள் ஓடோடி எம்மைக் காக்க வருகின்றார்கள் என்கின்ற செய்தியை பாறைசாற்றுவதாகவே நான் உணர்கின்றேன்.

மறைந்திருந்த கவிமாமணி கலா. விஸ்வநாதனை அடியேன் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, நெருக்கடியினால் பலரும் மறந்திருந்த சித்தர் பெருமானின் மகிமைகளை மீண்டும் நூலுருவில் நினைவுபடுத்தச் செய்வது குருவருளும் திருவருளுமாகும்.

கவிமாமணி கலா. விஸ்வநாதனைச் சித்தரமிர்தத்தின் ஆக்கப் பணிக்காகவும் அடியேனை இதன் வெளியீட்டுப் பணிக்காகவும் பணித்த குருவருளையும் திருவருளையும் வியந்து போற்றுகிறோம்.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கி அணி செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பொறியியல் துறை முன்னாள் விரிவுரையாளரும், ஆய்வாளருமான மு. நித்தியானந்தன் (லண்டன்), வாழ்த்துரை வழங்கிய முன்னாள் இந்து சமய கலாசார அமைச்சர் பி.பி. தேவராஜ், ஆசியுரை அருளிய ஸ்ரீ சுவர்ணாம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வர ஆலய பிரதமகுரு பிரம்மஸ்ரீ கா. செந்தில்குமார் குருக்கள் ஐயா, பாராட்டுரையில் அணி செய்த தமிழக கரூர் சித்தர் சபையின் ஆன்மீக எழுத்தாளர் ஜி. சிவராமன், இலங்கை சித்தர்பீடத்தின் குரு யோகி, சித்தர் ராஜகுமாரின் சீடரான இந்நூல் வெளிவர ஆலோசனைகளை வழங்கிய கோபிநாத் தங்கவேல் ஆகியோருக்கு நன்றி கூறுகின்றேன்.

 


Add new comment

Or log in with...