கட்டாருக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவானதும் நெருக்கமானதுமான உறவு

- இந்திய தூதுவர் தீபக் மிட்டால் தெரிவிப்பு

கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட அங்குரார்ப்பண விழாவில் இந்தியாவின் உப ஜனாதிபதி ஜகதீப் தங்கர் கலந்து கொண்டதன் ஊடாக கட்டாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கம் மிக்க உறவுக்குரிய வலுவான செய்தி வழங்கப்பட்டுள்ளது என்று கட்டாரிலுள்ள இந்திய தூதுவர் தீபக் மிட்டால் தெரிவித்துள்ளார்.

கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் அழைப்பின் பேரில் இந்த அங்குரார்ப்பண விழாவில் இந்திய உப ஜனாதிபதி கலந்து கொண்டதன் மூலம் கட்டாரிலுள்ள இந்திய சமூகத்தினர் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இது கட்டாருக்கும் பிராந்தியத்திற்கும் ஒரு முக்கியமான தருணம். இப்பிராந்தியத்தில் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டி நடைபெறுவது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். இவ்விழாவில் இந்திய உப ஜனாதிபதி கலந்து கொண்டதன் ஊடாக பழங்கால நாகரீகத் தொடர்பும் இந்திய - கட்டார் மக்களுக்கு இடையிலான வலுவான பிணைப்பும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சுமார் எட்டு இலட்சம் இந்தியர்கள் கட்டாரை இரண்டாவது தாயகமாகக் கொண்டுள்ளனர். 

இந்தியாவுக்கும் கட்டாருக்கும் இடையில் தூதரக இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருடம் ஐம்பதாவது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான ஒத்துழைப்பு உள்ளது. அவற்றில் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, மக்கள் மத்தியிலான உறவு, கல்வி மற்றும் கலாசாரம் என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.

இந்திய உப ஜனாதிபதியின் விஜயத்தின் ஊடாக நட்பின் பிணைப்பு ஆழமாக்கப்பட்டுள்ளதோடு இருதரப்பு உறவை வலுப்படுத்த முக்கிய பங்காளிப்பும் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டதாக ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...