பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கண்காணிக்கும் அமைப்பின் தலைவருடன் இந்திய உள்துறை அமைச்சர் சந்திப்பு

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளைக் கண்காணிக்கும் பிரான்ஸ் நாட்டை தலைமையகமாகக் கொண்ட நிதியியல் நடவடிக்கைகள் செயலணியின் (எப்.ஏ.ரி.எப்) தலைவர் ரி. ராஜ்குமாரை இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுடில்லியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

உள்துறை அமைச்சின் மேற்பார்வையின் கீழுள்ள தேசிய புலனாய்வு முகவரகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பயங்கரவாதத்திற்கு பணமில்லை' என்ற தொனிப்பொருளிலான இரண்டு நாட்கள் அமைச்சர்கள் மட்ட மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது.  அமைச்சர்கள், இராஜதந்திரிகள், பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.

இம்மாநாட்டில் பங்குபற்றி இருந்த நிதியியல் நடவடிக்கைகள் செயலணியின் தலைவருடனான சந்திப்பில் இரு தரப்பு உறவுகள் குறித்து உள்துறை அமைச்சர் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து உள்துறை அமைச்சர் விடுத்துள்ள உத்தியோகபூர்வ ட்வீட்டில், 'நிதியியல் நடவடிக்கை செயலணியின் பணிகளைப் பாராட்டியுள்ளதோடு பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளைத் தொடராகக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இச்செயலணியின் தலைவர், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்ப்பதற்கான அமைச்சர்கள் மட்ட மூன்றாவது மாநாட்டை புதுடில்லியில் நடாத்த மேற்கொண்டிருந்த ஏற்பாடுகளை இட்டு இந்தியாவைப் பாராட்டியுள்ளார். அத்தோடு இந்தியாவுடன் நெருக்கமாக செயற்படுவதற்கான விருப்பதையும் அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார். 

இவ்வாறான முதலாவது மாநாடு 2018 பிரான்ஸிலும் 2019 இல் அவுஸ்திரேலியாவிலும் நடைபெற்றன. புதுடில்லியில் நடைபெற்றிருக்கும் மூன்றாவது மாநாட்டில் 78 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல நிறுவனங்களும் பங்குபற்றின. 20 நாடுகளின் அமைச்சர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர் என்று ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...