SLFP யிலிருந்து சந்திரிகாவை இடைநிறுத்தத் தீர்மானம்

கட்சியின் மத்திய குழுவில் பலரும் குரல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் உறுப்புரிமையை இடைநிறுத்தும் தீர்மானத்திற்கு கட்சியின் மத்திய குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஏகமனதாக ஆதரவளித்துள்ளனர் என கட்சியின் உறுப்பினர்

ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டால் சந்திரிக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாழ்நாள் போசகர் என்ற நிலைக்கு என்ன நடக்கும் என்ற கேள்விக்கு, 'கட்சியில் உறுப்பினரின் அனைத்து பதவிகளும் இரத்தாகும்' என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகரும் கொலை செய்யப்பட்ட பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் மகளுமான சந்திரிகா குமாரதுங்க 1994 முதல் 2006 வரை கட்சியின் தலைவராக பதவி வகித்தார்.

2015 இல் மைத்திரிபால சிறிசேனவை பதவிக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டார்.

எனினும் 2019 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க தீர்மானித்ததை தொடர்ந்தும் 2020 பாராளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட தீர்மானித்ததை தொடர்ந்தும் அதிருப்தியடைந்த முன்னாள் ஜனாதிபதி தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக உள்ள மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது சிரேஸ்ட தலைவர்களை நினைவுகூரும் நிகழ்வை தனித்தனியாக நடத்தியதை தொடர்ந்து இந்த முறுகல் நிலை தீவிரமடைந்தது.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் சபாநாயகர் அனுரபண்டாரநாயக்க ஆகியோரின் நினைவு தினங்களை கட்சி கொழும்பில் நடத்தியது. அதேவேளை இவர்களின் நினைவுதின நிகழ்வுகளை முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதரியும் ஹொரகொல்லவில் நடத்தினார்கள்.


Add new comment

Or log in with...