பதாகைகளை ஏந்துவதால் மக்களுக்கு எந்த பலனுமில்லை

- எம்.பிக்கள் ஆக்கபூர்வமாக செயற்பட அழைப்பு

எதிர்க்கட்சியில் அமர்ந்து வெறுமனே பதாகைகளை ஏந்துவதால் எம்மை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களுக்கு எதையும் செய்ய முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாம் அரசியலுக்கு வந்ததும் பாராளுமன்றத்துக்கு வந்ததும் எமது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், எதிர்க்கட்சியில் அமர்ந்து வெறுமனே பதாகைகளை உயர்த்திக் கொண்டிருப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டில் இலாபமீட்டாத நிறுவனங்கள் மட்டுமன்றி இலாபமீட்டும் ஒரு சில நிறுவனங்களையும் மறுசீரமைப்பு செய்து வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்துக் கொள்வது அவசியம். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது மிக அவசியமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பெருமளவு வருமான வரி கிடைக்காமல் உள்ளது. வருமான வரியை அறவிடுவதில் முறையான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். புதிதாக அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இம்முறை ஊவா மாகாணத்தில் 354 பேர் மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு நான் ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் அரசியலுக்கு வந்ததும் பாராளுமன்றத்திற்கு வந்ததும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பதாகைகளை உயர்த்துவதற்கல்ல. எமது மக்களின் தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். எமது மக்களும் அதையே தெரிவிக்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...