தெளிவத்தை ஜோசப் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு

'தெளிவத்தை ஜோசப் கதைகள்' என்ற பெருந்தொகுப்பு மலையகம், இலங்கை என்ற எல்லைகள் தாண்டி தமிழ் இலக்கியப் பரப்புக்குக் கிடைத்திருக்கும் பெரும் பொக்கிஷமாகும். ஒரு அரைநூற்றாண்டு கால எழுத்துப்பணியில் தெளிவத்தை ஜோசப் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் இலக்கியக்கருவூலம் இது.

இலங்கையை வளம்படுத்தப் போராடி கோப்பி, தேயிலை, இறப்பர் தோட்டங்கள் அமைத்து, சாலைகள் அமைத்து, ரயில் பாதைகள் உருவாக்கி, பாலங்கள் நிர்மாணித்து, சுரங்கங்கள் ஆக்கி, தங்களின் வேர்வையிலும் இரத்தத்திலும் இலங்கையை செல்வத்தால் செழிக்கச் செய்த மக்கள் கூட்டம் இது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, ஐந்து இலட்சம் மலையக மக்கள் தாங்கள் பிறந்த மண்ணிலிருந்து தமிழகத்திற்கு நாடு கடத்தப்பட்ட அவலம் சிறிமாவோ_- சாஸ்திரி ஒப்பந்தத்தில் நடந்தேறியது.

இந்த சமூகத்தின் கதையை சிறுகதைகளாய், நாவலாய் எழுத்தில் வடித்த மலையகத்தின் எழுத்துச் சிற்பி தெளிவத்தை ஜோசப் ஆவார்.

தெளிவத்தை ஜோசப் தனது 89 ஆவது வயதில் இந்த ஆண்டில் (2022) மறைந்தமை தமிழ் இலக்கிய வானில் கருந்திரையைப் போர்த்தியிருக்கிறது. மலையக மக்களது வாழ்வின் துயர்க்கோலங்களை, சுரண்டலின் அகோரத்தை, அவலப்பட்டுப்போன சமூகக்கூட்டத்தின் கதையை அழியாத கல்வெட்டாய் தமிழ் இலக்கிய உலகில் பொறித்துவைத்து விட்டுப்போனவர் அவர்.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கிய உலகின் அரசனாக உலாவந்த இலக்கியத்தலைமகன் இன்றில்லை எனும் செய்தி நம் நெஞ்சில் துயர அலைகளை எழுப்பி நிற்கிறது. தமிழ் இலக்கியப்பரப்பில் ஒரு தமிழ்ச் சமூகம் எந்த அளவு துயரங்களை, அடிமைவாழ்வின் கூறுகளைக் கொண்டியங்கியது என்பதை ஜோசப் அவர்களைப்போல கலாநேர்த்தியுடன் சித்திரித்த பெரும் எழுத்தாளன் யாருமில்லை.

மலையக சமுதாயத்தின் நிதர்சனத்தை, அதன் வெம்மையின் தவிப்பை, சிறுமையின் இழிவை, சுரண்டலின் சூக்குமத்தை, இனவாதத்தின் நச்சுக்கொடுக்குகளை, உணர்வுகளின் இடத்தை தந்திரமும் வக்கிரமும் அபகரித்து விட்ட அவலத்தை தனது கதைகளிலே அவர் மீட்டியிருக்கிறார்.

அவர் எழுதிய மொத்தம் அறுபது கதைகளில் எங்கள் கைவசமிருந்த 57 கதைகளைத் தொகுத்து பெருந்தொகுதியாக ஒரு நூலை அவரின் கைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற பேராவலில் நாங்கள் பெரும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம். அச்சிலிருந்த கதைகளை அவரே மொய்ப்புப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்தத் துயரம் கவிந்தது பெருஞ் சோதனை. அவர் ஏறத்தாழ தொலைந்து போனதாகவே கருதியிருந்த 'காட்டுப்பூ' என்ற சிறுகதையை எனது சேகரத்திலிருந்து கடைசியாகச் சேர்த்து அச்சேற்றி அனுப்பியபோது அக்கதையை ஆர்வத்தோடு வாசித்துபார்த்து மகிழ்ந்த மறுநாள், அப்பெருமகன் இறுதி மூச்சை விட்டிருக்கிறார் என்று அவரது இனிய மகள் சியாமளா சொன்னபோது நான் நெஞ்சிழந்தேன்.

அவரது கதைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாக அந்த இலக்கியத் தலைமகனின் கரங்களில் சேர்த்துவிடவேண்டும் என்ற என் கனவு நனவாவதற்கிடையில் அவர் தலை சரிந்து போன செய்தி என் நெஞ்சில் துயரக்கனலை மூட்டியது. இறுதிவரை என்னுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தவர், தனது பெருந் தொகுதிக்காக தனது முன்னுரையை உற்சாகமாக எழுதிக்கொண்டிருந்தவர் அந்த நூலை ப்பார்க்காமலே கண்களை மூடிக்கொண்டு விட்டார்.

அவரின் முழுக்கதைகளையும் தொகுத்துப் படிக்கிறபோது , அந்த மனிதரின் நெஞ்சமெல்லாம் மலையக மக்கள் நிறைந்துபோய்க் கிடந்திருக்கிறார்கள் என்பதைப்பூரணமாக உணரமுடிகிறது. அந்த அவல வாழ்வின் மீது அவர் கொண்டிருந்த ரெளத்திரம் தெரிகிறது. சிறுமை கண்டு பொங்கும் அவரது சீற்றம் தெரிகிறது. மனிதன் அற்பஜீவியாக வாழும் சிறுமை அவரது நெஞ்சிலே தணல் மூட்டியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. தனது கதை மாந்தர்களுக்காக தனது படைப்புகளை அவர் சமர்ப்பணம் செய்திருப்பதின் அர்த்தம் புரிகிறது.

மலையகத்தின் சுரண்டலை, கொடுமையைக் காணச் சகிக்காத ஒரு கலகக்காரனின்

கோபக்கனலாக தெளிவத்தை ஜோசப்பின் கதைகள் தெறித்து விழுந்திருக்கின்றன. சிறுமை கண்டு பொங்கும் சீற்றம் அவரது கதைகளில் கொப்புளிக்கிறது. மலையக மக்களின் வாழ்வியலின் மூலை முடுக்கெல்லாம் அவரின் பார்வை மேய்ந்திருக்கிறது. மலையக மக்களின் சின்ன சின்ன ஆசைகள், கோபதாபங்கள், பீலிச்சண்டைகள், தோட்ட உத்தியோகஸ்தர்கள், கங்காணிகளின் குணாம்சங்கள், குடும்ப உறவுகள், சிக்கல்கள், அப்பாவித்தனங்கள், அறியாத்தனங்கள், போலித்திருப்திகள், வஞ்சங்கள், இயலாமைகள் அனைத்தையும் ஜோசப்பின் கதைகள் பேசுகின்றன. அந்த மக்களின் யதார்த்த வாழ்வை தெளிவத்தை ஜோசப்பைப்போல பிரதிபலித்தவர்கள் யாருமில்லை.

மு. நித்தியானந்தன் லண்டன்


Add new comment

Or log in with...