அரச தனியார் துறை பணியாளர்களின் திறன் விருத்தியில் இந்தியா அதிக கவனம்

மாறிவரும் வணிக சூழலின் போட்டிச் சந்தைக்கு ஏற்ப நகர் மற்றும் கிராமப் புறங்களிலுள்ள கல்வி, சுகாதாரம், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களைப் புதிய  திறன்களைக் கொண்டவர்களாக மேம்படுத்துவதில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கேற்ப, இந்திய மத்திய திறன் விருத்தி அமைச்சு திறன்விருத்தி மத்திய நிலையங்களை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

நாட்டின் சகல துறைகளிலும் மேலும் முன்னேற்றங்களை உறுதி செய்வதற்கு தொழில்படையைப் புதிய திறன்களுடன் தயார்படுத்திக் கொள்வதன் அவசியம் உணரப்பட்டுள்ளது என்று 'எக்னோமிக் ரைம்ஸ்' தெரிவித்துள்ளது.

இப்பின்புலத்தில் தேசிய பயிற்சி நிலையங்களும் பாரதி திறன் நிலையங்களும் ஆயிரக்கணக்கான திறன்விருத்தி நிலையங்களை அமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளன. இதன் ஊடாக வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ள இலட்சக்கணக்கான இளைஞர்கள் தம் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் எந்தவொரு நாட்டுக்கும் திறன்விருத்தியுடனான ஊழியர் படை அவசியம். அந்த வகையில் இந்திய திறன்கள் இயக்கத்தின் ஊடாக பெருந்தொகையான இளம் சனத்தொகையினர் தகுதியான மனித வளக் குழுவினராக மாற்றப்பட்டுள்ளனர்.

கைத்தொழில் பயிற்சி நிலையத்தின் ஊடாக ஒன்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த மாதம் பட்டம் பெற்றுள்ளனர். 21ஆம் நூற்றாண்டுக்கு தேவையான திறன்களுடன், சுயதொழில்களில் ஆர்வத்துடன் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியாவின் தற்போதைய 5.4 சதவீத திறன் விருத்திப் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.  திறன் விருத்தி உட்கட்டமைப்பையும் உலகளாவிய தரத்திற்கு மேம்படுத்த வேண்டும். சமூகத்தில் நலிவடைந்துள்ள பெரும் பகுதியினருக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தச்சர், கொல்லர், பொருத்துனர், தையல்காரர் உள்ளிட்ட அனைத்துத் தொழில்துறையினருக்கும் பயிற்சி, ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி பாரம்பரிய திறன்களை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

கொவிட்-19 தொற்றின் விளைவாக திறன் விருத்தி நடவடிக்கைகள் இணைய தள பொறிமுறைக்கு மாறியுள்ளது. குறிப்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்ற நடவடிக்கைகளில் நிலைபேறான அபிவிருத்தி இழக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தன்னிறைவை நோக்கிய உந்துதலின் ஒரு பகுதியாக, தொழில்துறை பயிற்சி மையங்கள் நிறுவப்படுவதோடு, ஒதுக்கப்படக்கூடிய இடங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் உயர்ந்துள்ளன. கடந்த ஏழு ஆண்டுகளில், 5,000 புதிய கைத்தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் 10,000 க்கும் மேற்பட்ட தொழில்துறை பயிற்சி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் 'எக்னோமிக் ரைம்ஸ்' குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...