பிணையில் இருக்கும் தனுஷ்கவுக்கு ஆஸி. இலங்கை செல்வந்தர் உதவி

கடுமையான நிபந்தனைகளுடன் சிட்னி நீதவான் நீதிமன்றம் ஒன்றினால் கடந்த வியாழக்கிழமை (17) பிணை வழங்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவில் உள்ள செல்வந்தரான இலங்கை பிரஜை ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பதோடு அவரது முகவரியாக அந்த வீட்டு முகவரியே அவுஸ்திரேலிய பொலிஸுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணையில் கண்டிப்பான நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டிருக்கும் குணதிலக்கவுக்கு மெல்போர்னில் இருக்கும் பெயர் வெளியிடப்படாத இலங்கை பெண் ஒருவர் இந்தப் பிணையில் முழுத் தொகையையும் செலுத்தியுள்ளார். இந்தப் பெண்ணுக்கும் குணதிலக்கவுக்கும் உள்ள தொடர்பு என்ன அல்லது அவர் வெறுமனே ரசிகரா என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.

பிணை வழங்கப்பட்ட தனுஷ்கவுக்கு சிட்னியில் வாழும் இலங்கையர்கள் பலர் தங்குமிடம் வழங்கவும் அவர் தங்கியிருக்கும் காலத்தில் ஏற்படும் செலவுகளை ஏற்கவும் முன்வந்ததாக நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. மெல்போர்னில் வசிக்கும் இலங்கையர்களும் தனுஷ்கவுக்கு வசதிகளை வழங்க முன்வந்திருந்தனர்.

இதனால் இலங்கை கிரிக்கெட் சபை தனுஷ்கவின் செலவுகளை ஏற்கவில்லை என்றபோதும் அவரது வழக்குக்கான செலவுகளை ஏற்றுள்ளது.

சிட்னி பெண் ஒருவர் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜனவரி 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக தனுஷ்க மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பிணையில் இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியேறத் தடை, தினசரி பொலிஸில் அறிவிக்க வேண்டும் என பல கண்டிப்பான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...