ஓமானில் இலங்கை பெண்கள் விற்பனை, ஆட்கடத்தல்; பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது

சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதுடைய குறித்த சந்கேதநபர் இன்று (19) காலை இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கமை, சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு வேலை பெற்றுத் தருவதாக கூறி ஓமானில் நடத்தப்படும் பாரிய மனித கடத்தல் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வு திணைக்களம் அம்பலப்படுத்தியுள்ளது.

ஓமானில் இலங்கைப் பெண்கள் பல்வேறு தவறான செயல்களுக்கு உட்படுத்தப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின், மனித கடத்தல் புலனாய்வு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோனின் மேற்பார்வையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 3 அதிகாரிகள் கொண்ட குழு கடந்த ஒக்டோபர் 03 ஆம் திகதி ஓமான் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

ஒக்டோபர் 09ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்த விசாரணைக் குழுவினர், ஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 45 பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

இதன்போது, சுற்றுலா வீசாவில் அழைத்து வரப்பட்டுள்ள குறித்த பெண்கள் தாங்கள் பணி புரிந்த வீட்டை விட்டு பல்வேறு காரணங்களுக்காக வெளியேறியமை தெரியவந்தது.

அவர்கள் பணிபுரிந்த வீடுகளின் உரிமையாளர்களான சுல்தான்களிடம் அவர்களின் கடவுச்சீட்டுக்ள் காணப்படுவதால் அவர்கள் இலங்கை திரும்ப முடியாமல் குறித்த இல்லத்தில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.

அளவுக்கதிகமான வேலை காரணமாக குறித்த 45 பேரில் 6 பெண்கள் தாம் பணி புரிந்த வீடுகளிலிருந்து தப்பி வந்துள்ளமை தெரிவந்துள்ளது.

மேலும் 8 பேர், எல்லை விதிமுறைகளை மீறி துபாயிலிருந்து ஓமானுக்கு சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மற்றுமொரு பெண் அந்நாட்டில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்தது.

இதன்போது, இலங்கையில் உள்ள முகவர் நிறுவனத்திற்கான, ஓமானில் உள்ள பிரதிநிதி பெண் ஒருவரால் குறித்த பெண் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் பெண்கள் ஏலத்திற்காக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு அந்நாட்டு எஜமான்களான சுல்தான்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, 22 - 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அங்கு உள்ளதாகவும், இளம் பெண்கள் ரூ. 10 இலட்சம் முதல் சுமார் ரூ. 25 இலட்சம் வரையான தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இவ்வாறு வந்த பெண்ணொருவர் ஓமானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அம்பலப்படுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஓமானில் உள்ள அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையிலுள்ள குடிவரவு அதிகாரிகள் குழு இந்த வலையமைப்பை நடத்துவதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் பல்வேறு பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் பெண்களை இலக்கு வைத்து குறித்த மனிதக் கடத்தலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த ஆஷா திஸாநாயக்க என்ற பெண்ணே இந்த மனித கடத்தலில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் கேட்டபோது, ​​ஓமானில் இருந்து பெண்கள் சுற்றுலா வீசாவில் நாட்டிற்குச் சென்றிருப்பதால் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலவுவதாக, சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான ஓமானிய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை உயரதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் (17) பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, அவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபர் இலங்கை வர அவசியமான அனைத்து செலவுகளையும் அவர் தனது சொந்த பணத்திலேயே மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள பெண்களில் சுமார் 12 பேர் கடந்த 16 ஆம் திகதி அங்கிருந்து பலாத்காரமாக ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த ஆட் கடத்தல் சம்பவத்தில் இலங்கை விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகவும், ஓமானில் பணியாற்றும் தூதரக அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...