சந்தேகநபரான சட்டத்தரணி நீதிமன்றில் சரணடைந்தார்

கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி, அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கூறி கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்கில் 59 ஆவது சந்தேக நபராக சிரேஷ்ட சட்டத்தரணி நுவன் போப்பகேயின் பெயரை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர் (17) கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சட்டத்தரணி நுவன் போப்பகே சந்தேக நபராக பெயரிடப்பட்டிருந்தார். ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக தெரிவித்து, இவ் விடயம் தொடர்பில் கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியகம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி 71 பேரை அடையாளம் காண பொலிஸ் ஊடகப் பிரிவூடாக ஊடகங்களில் புகைப்படங்களும் பிரசுரிக்கப்பட்டன.

விசாரணை அதிகாரிகள் சம்பவத்தின் 59 ஆவது சந்தேக நபராக சட்டத்தரணி நுவன் போப்பகேயை பெயரிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதற்கு முன்னர் இவ்விவகாரத்தில் 58 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் நுவன் போப்பகே நீதிமன்றத்தில் சரணடைந்ததுடன், அவருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் பெருமளவு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் முன் வைத்த விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதிவான் திலின கமகே, சட்டத்தரணி நுவன் போப்பகேயை 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவித்தார்.

 


Add new comment

Or log in with...