சமஷ்டி முறையிலான தீர்வு பேச்சு நடத்த TNA தயார்

 பாராளுமன்றத்தில் நேற்று சிறிதரன் M.P தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சமஷ்டி முறையில் ஆட்சி முறையை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் சிறிதரன் M.P சபையில் சுட்டிக்காட்டு

 

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதய சுத்தியுடன் முன் வருவாரானால் சமஷ்டி முறையில் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரென எஸ்.சிறிதரன் எம்.பி பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான நான்காவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரச தலைவர்கள் மத்தியில் காணப்படும் இனவாதம் மற்றும் மதவாத சிந்தனைகள் ஒருபோதும் பொருளாதாரத்தை மேம்படுத்த இடமளிக்காது.

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து வாருங்கள். தீர்வை கையில் வைத்துள்ளோம் என்று உறக்கத்தில் இருந்து எழுந்தவர்களைப் போல அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோர் அழைப்பு விடுக்கின்றனர்.

இவர்கள் உலகத்தை முழுமையாக ஏமாற்றும் வகையில் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்கள்.

அந்த வகையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாட்டில் சமஷ்டி ஆட்சி முறைமையை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சிங்கள தலைவர்களிடமும் சிங்கள இளைஞர்களிடமும் நாம் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

2016 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி கூடிய அரசியலமைப்பு சபை கூட்டத்தில் ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், விருப்பு வாக்கு முறைமையை நீக்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணல் போன்ற முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் ஐந்து ஆண்டுகள் கடந்தும் அந்த தீர்மானங்கள் எதுவும் செயற்படுத்தப்படவில்லை.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தந்தை செல்வா ஒப்பந்தம்,டட்லி - செல்வா ஒப்பந்தம்,ரணில் - பிரபா ஒப்பந்தம்,இலங்கை இந்திய ஒப்பந்தமென பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய பின்னணியில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோர் நித்திரையில் இருந்து எழுந்ததைப் போன்று கருத்துக்களை முன் வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாட்டின் எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்தும் போது இனவாதத்தை விடுத்து பொதுத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.

இனவாதம், மதவாதம் தான் இந்த நாட்டை இந்தளவுக்கு சீரழித்துள்ளதென்பதை முதலில் உறுதியாக விளங்கிக் கொள்வது அவசியம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது பொறுப்பல்ல, அது எமது கடமையென குறிப்பிட்டிருந்தார். அடிக்கடி கொள்கையை மாற்றிக் கொண்டதால் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற அவரால் முடியவில்லை.

வடக்கு தமிழ் அரசியல் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாரென ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...