கட்டுப்பாடான வாழ்க்கை முறையே நீரிழிவு பாதிப்பை தடுப்பதற்கான வழி

இன்று உலக நீரிழிவு தினம்

நீரிழிவை முழுதாகக் குணமாக்க முடியாது. இருப்பினும் மருத்துவ ஆலோசனைப்படி நடப்பதால் இந்நோயின் தொடர்விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொறுத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் கவனத்துடன் செயற்பட்டால் உடல் ஆரோக்கியத்தைப் பேணி, வாழ்நாளை நீடித்துக் கொள்ள முடிகிறது.

இன்சுலினை கண்டுபிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்' என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14ம் திகதி, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025 இ-ல் 36 கோடி 50 இலட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் அது, 2030ஆம் ஆண்டுக்குள் ஏழாவது இடத்தைப் பிடித்துவிடுமென்று மதிப்பிடப்படுகிறது.

நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு, முதலில் அந்நோயைப்பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நீரிழிவு நோய் என்ன காரணத்தால் ஏற்படுகிறது. அது மனித உடலை எந்த வகையில் பாதிக்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமல்லாது அனைவரும் அறிந்திருத்தல் இன்றியமையாதது.

சிலரின் உடலில் நீரிழிவு நீண்டகாலங்களாகக் காணப்பட்டாலும் கூட நோயாளியின் அறியாத்தன்மை காரணமாக தனக்கு நீரிழிவு உள்ளது என்பதை நோயாளி உணர்ந்து கொள்வதில்லை. இதனால் பல பாரதூரமான விளைவுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. எனவே நீரிழிவு நோயின் மூலமான அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம்.


Add new comment

Or log in with...