சிட்னியில் இலக்கிய சந்திப்பும் ஐந்து நூல்களின் அறிமுக விழாவும்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சிட்னி இலக்கிய சந்திப்பு 2022 தூங்காபி கொமினிற்றி மண்டபத்தில் (Toongabbie Community Centre) கடந்த 05-11-2022 சனிக்கிழமை மாலை சிறப்புற நடைபெற்றது.

இச்சந்திப்பின் முதல் நிகழ்வாக மலையக இலக்கிய ஆளுமை தெளிவத்தை ஜோசப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கலாநிதி. திருமதி. சந்திரிக்கா சுப்பிரமணியன் தலைமையில் நடந்த சிட்னி இலக்கிய சந்திப்பில் வரவேற்புரையை திருமதி கனகா கணேஷ் ஆற்றினார்.

இதன் பின் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கத்தின் ‘வரலாற்றுச் சுவடுகள்’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. 22 வருடங்களாக தமிழையும் இலக்கியத்தையும் இரண்டு கண்களாகக் கொண்டு இயங்கிக் கொண்டு வருகின்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வரலாற்றுச் சாட்சியமாக இந்த ஆவணப்படம் உறுதிப்படுத்தியது.

இந்த சிட்னி இலக்கிய சந்திப்பில் ஐந்து நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வும், அறிமுக விழாவாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்:

3 C R தமிழ்க்குரல் வானொலியில் தங்கு தடையின்றி, வாரம்தோறும் அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதி தனது குரலிலேயே ஒலிபரப்பிய சபேசன் சண்முகத்தின் நூற்றுக்கணக்கான ஆக்கங்களை செம்மைப்படுத்தி தொகுத்து ‘காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது.

இந்நூலின் ஆய்வுரையை ஐங்கரன் விக்கினேஸ்வரா ஆற்றினார். யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான சபேசன், அவுஸ்திரேலியா மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், 3 C R தமிழ்க்குரல் வானொலியில் கால் நூற்றாண்டு காலம் ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் சிறப்புற விளங்கியவர். தன் வாழ்நாட்களிலேயே இந்நூலை வெளியிடவிரும்பியிருந்த சபேசன், அதனை சாத்தியமாக்காமல் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி மெல்பனில் விடைபெற்றுவிட்டார்.

மறைந்த சபேசனின் நண்பரும் எழுத்தாளரும் தமிழக அரசியல் பிரமுகருமான திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் முனைவர் சுபவீரபாண்டியனின் அணிந்துரையுடன் வெளியாகியிருக்கிறது இந்நூல்.

இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்:

தொடர்ச்சியாக ஆடற்கலைகள் தொடர்பான ஆக்கங்களை எழுதிய நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர் தீவிரமான ஆராய்ச்சியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புத்தான் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள் எனும் நூல். நூலின் வாசிப்பு அனுபவ உரையை திருநந்தகுமார் ஆற்றினார்.

இதுவரையில் இந்நிகழ்ச்சிக்காக 250 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி பேசியிருக்கிறார். அவற்றுள் தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளின் தொகுப்பே இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள் எனும் நூலாகும்.

ஞானம் ஆசிரியர் தி . ஞானசேகரன் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். பிரபல்யமான சென்னை காந்தளகம் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

நடேசனின் ‘அந்தரங்கம்’:

அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக எழுதும் நோயல் நடேசனின் ‘அந்தரங்கம்’ சிறுகதைகள் நூலின் அறிமுக உரையை செ. பாஸ்கரன் சிறப்பாக விமர்சித்து ஆராய்ந்தார். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், அரசியல் பத்தி எழுத்து மற்றும் தான் சார்ந்த விலங்கு மருத்துவத்துறை அனுபவங்கள் சார்ந்த பதிவுகள் என்பனவற்றை தொடர்ச்சியாக எழுதிவரும் நடேசனின் சிறுகதைகளும், நாவல்களும் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

முருகபூபதியின் ‘கதைத்தொகுப்பின் கதை’:

முருகபூபதி எழுதிய கதைத்தொகுப்பின் கதை எனும் சிறுகதைகள் நூல் ஆய்வுரையை கானா. பிரபா சார்பாக இளம் படைப்பாளி அம்பிகா வாசித்தார். 2021ஆண்டில் படைக்கப்பட்ட கதைத்தொகுப்பின் கதை என்னும் சிறுகதைத்தொகுதி ஜீவநதி வெளியீடாக வெளிவந்தது. 15 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் இடம்பெறும் ‘அம்மம்மாவின் காதல்’, ‘அவள் அப்படிதான்’, ‘ஏலம்’, ‘கணங்கள்’, ‘நேர்காணல்’ ஆகிய ஐந்து சிறுகதைகளிலும் பரந்து விரிந்து இடம்பிடித்துநிற்கும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக இக்கதைகள் அமைகின்றன.

எழுத்தாளர் முருகபூபதி தமிழ் எழுத்துலகம் நன்கு அறிந்த ஒரு படைப்பாளி. புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் இவர் ஐந்து தசாப்தங்களாக எழுத்து துறைக்குள் பயணித்துக்கொண்டு தொடர்ந்து இலக்கியப் பணி ஆற்றிவருகின்றார்.

கனடா ஸ்ரீரஞ்சனியின் ‘ஒன்றே வேறே’

கனடா ஸ்ரீரஞ்சனியின் ‘ஒன்றே வேறே’ சிறுகதைகள் நூலின் ஆய்வுஉரையை சௌந்தரி கணேசன் வழங்கினார். இலங்கை மகுடம் பதிப்பகத்தின் வெளியீடான ஸ்ரீரஞ்சனியின் ஒன்றே வேறே கதைத் தொகுதியின் வாசிப்பு அனுபவம் சார்ந்த தமது நயப்புரைகளை சௌந்தரி கணேசன் சிறப்பாக திறனாய்வு செய்தார்.

இலங்கையில் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் பின்னர் கனடா – வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் ஸ்ரீரஞ்சனி, இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானப் பட்டதாரியாவர்

கனடாவில் வதியும் எழுத்தாளரும் ஆசிரியருமான ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா அவுஸ்திரேலியாவிற்கு இந்நூல் வெளியீட்டுக்காக இங்கு வருகை தந்தார். இந்நிகழ்வு சிறப்பாக அமைய, நீண்ட காலமாக மெல்பேர்னிலிருந்து தமிழ் முழங்கும் எழுத்தாளர் லெ.முருகபூபதியின் பங்களிப்பு அளப்பரியது.

ஐங்கரன் விக்கினேஸ்வரா


Add new comment

Or log in with...