கால தாமதமாகியுள்ள ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்க நடவடிக்கை

- பிரதமர் தினேஷ் குணவர்தன

ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்கும்போது கடந்த காலத்தில் கால தாமதமாகியிருந்ததை சரிசெய்வதற்கு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய திறைசேரியின் அனுமதியைப் பெற்று இரண்டு பகுதிகளாக இக்கொடுப்பனவுகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமரும், பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற (08) அந்த அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்குவது கால தாமதமாவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் வகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியில் திறைசேரியினால் நிதியை விடுவிப்பதில் உள்ள தாமதம் காரணமாக ஓய்வூதியப் பணிக்கொடையைப் பெறுவதற்கு அதிகமானவர்கள் இதுவரை காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக ஓய்வூதிய பணிப்பளார் நாயகம் இங்கு தெரிவித்தார். தற்பொழுது 2022 ஜனவரி வரையான அனைத்துக் கொடுப்பனவுகளையும் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் 2022 ஜனவரி முதல் எஞ்சிய காலத்துக்குத் தேவையான நிதியை விடுவிப்பதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கமைய அந்த நிதியை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.   

அதேபோன்று, ஓய்வூதிய வயதை 60 வயது வரை குறைத்தமை காரணமாக இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியை அடுத்து புதிய விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்ப்பதாக ஓய்வூதியப் பணிப்பளார் நாயகம் குறிப்பிட்டார். அவர்கள் அனைவருக்கும் அடிப்படை ஓய்வூதியத்தை விரைவாக வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் நீண்ட காலம் பணியாற்றிய ஊழியர்களின் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, எதிர்கால செயற்பாடுகளை  பரிந்துரைப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

அதேபோன்று, தற்பொழுது தாமதமாக காணப்படும் அரசாங்க நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளை விரைவாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். மேலும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் அறிவித்து தாமதமாகியுள்ள அறிக்கைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பது என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பல்வேறு நகர சபைகள் மாநகர சபைகளாகத் தரமுயர்த்தும் பிரதமரின் வேலைத்திட்டம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன, வடமாகாணத்தில் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளமை தொடர்பில் பாராட்டைத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாநகரசபையாகத் தரமுயர்த்தப்படும்போது மன்னார் பிரதேச சபையை இரத்துச் செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகப் பிரிவை விஸ்தரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பிரதமர் அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த, இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, இந்திக்க அனுருத்த, அனுப பஸ்குவல் ஆகியோரும் குழுவின் உறுப்பினர்களான ரஞ்சித் மத்துமபண்டார, ஜே.சி. அலவதுவல, ஜயந்த கெடகொட, சுதத் மஞ்சுள ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும், மனோ கணேசன், சந்திம வீரக்கொடி, யதாமினி குணவர்தன, எச்.எம்.எம். ஹரீஸ், ரோஹன பண்டார, மதுர விதானகே, சார்ள்ஸ் நிர்மலநாதன், குணதிலக ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பினர்களும் அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 


Add new comment

Or log in with...