உருமாறி வரும் நூலகங்களுடன் மக்களை ஒன்றிணைத்தல்

இலங்கைப் பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் சர்வதேச மாநாட்டின்போது பிரதம அதிதியான இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நூலக தகவல் விஞ்ஞான நிலைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் பிரேமகுமார டி. சில்வாவுக்கு இலங்கைப் பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் தலைவரும், சர்வதேச மாநாட்டு இணைத்தலைவருமான கலாநிதி டபிள்யூ. ஜெ.ஜெயராஜ் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிப்பதைப் படத்தில் காணலாம்.

சர்வதேச ஆய்வு மாநாடு ICULA 2022

கடந்த இரண்டரை வருட கால இடைவெளிக்குப் பின்னர், அண்மையில் முதற்தடவையாக நேரடிப் பிரசன்னத்துடன், இலங்கைப் பல்கலைக்கழக நூலகர் அமைப்பினர் இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நூலக, தகவல் விஞ்ஞான நிலைக்குழுவோடு இணைந்து, சர்வதேச ஆய்வு மாநாடொன்றைப் பிரமாண்டமானமுறையில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்வி மற்றும் நூலகத் தகவல் விஞ்ஞானத் துறைகளில் வீரியம் பெற்றுவரும் பல்வேறு அபிவிருத்திப் போக்குகளை ஆய்வுகளினூடு ஆராய்ந்த இம்மாநாட்டில் மாலைதீவு, இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பல்வேறு ஆய்வாளர்களும், துறைசார் விற்பன்னர்களும் தத்தமது புலமைசார் படைப்புக்களை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தனர். அத்துடன் சமகாலச் சவால்களை எவ்வாறு ஆரோக்கியமாக மேற்கொண்டு, நூலகத்துறையை மீள் பொறிமுறைக்குள்ளாக்கும் நுட்பமுறை பற்றியும் ஓர் அறிவுசார் குழுநிலை விவாதமும் நடைபெற்றது.

இலங்கைப் பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் தலைவரும், இச்சர்வதேச ஆய்வு மாநாட்டின் இணைத்தலைவருமான கலாநிதி டபிள்யூ. ஜெ. ஜெயராஜ் இதுகுறித்துக் கூறுகையில், ஓர் நாட்டின் தரநிர்ணயமானது, அறிவுசார் சமூகத்தின் விகிதாசாரத்தை வைத்தே கணிக்கப்படுவதுடன், இவ்வறிவுசார் சமூகத்தைச் செல்நெறிப்படுத்துவதில் நூலகத் தகவல்துறை பாரிய பங்காற்றிவருவதால், கொரோனா பேரிடர்பாட்டுக்குப் பின்னரான புதிய இயல்புநிலைக்கேற்ப மீள் உருவாக்கலுக்குள்ளாகி வரும் நூலகத்துறையினை மக்களுடன் இணைக்க வேண்டிய தேவைப்பாடுள்ளதெனக் குறிப்பிட்டார்.

பிரதம அதிதியாக, இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நூலக, தகவல் விஞ்ஞான நிலைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் பிரேமகுமார டி. சில்வா மற்றும் கௌரவ அதிதியாகக் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வி. கனகசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய இச்சர்வதேச மாநாட்டில், தலைவருக்கான ஆரம்ப உரையினை அமைப்பின் தலைவர் கலாநிதி டபிள்யூ. ஜெ. ஜெயராஜ் நிகழ்த்தினார். மாநாட்டு அறிமுக உரையினை மாநாட்டு இணைத்தலைவர் கலாநிதி சி. சி. ஜயசுந்தர நிகழ்த்தியிருந்தார்.

பிரதம அதிதி தமதுரையில், கற்றல் மற்றும் தொடர்பாடல் வலையமைப்பினைக் கட்டியெழுப்பிவரும் பல்கலைக்கழக நூலகங்கள், மக்களை இலகுநிலையில் உள்வாங்கும் நிலையில் தமது பாரிய பங்களிப்பினை அளித்து வருவதை பாராட்டிப் பேசினார். கௌரவ அதிதி தமதுரையில், நூலகங்களின் மரபுசார் வழிமுறைகளிலிருந்து தொழினுட்பரீதியிலான படிமுறை வளர்ச்சிக்கு அத்திவாரமிடுவதில் இவ்வாறான ஆய்வு மாநாடுகள் செல்வாக்குச் செலுத்துவதையும்;, எதிர்காலச் சந்ததியினரைப் புடமிடுவதில் மேற்கொள்ளப்பட்டுவரும் நூலக ஆய்வுகளின் தளங்களையும் வெகுவாகச் சிலாகித்துப் பேசினார்.

இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் அரங்கேறிய, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பட்டதாரி மாணவர்களின் கலாசார நடனம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

மேலும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழக நூலகர் ​ெடாக்டர் வத்மானெல் செனவிரெட்ண, களனிப் பல்கலைக்கழக நூலக, தகவல் விஞ்ஞான சிரேஷ்ட விரிவுரையாளர் ​ெடாக்டர் நாமலி சுரவீர மற்றும் கொழும்புப் பல்கலைக்கழக பிரதி நூலகர் ​ெடாக்டர் டி. சந்திராணி குருப்பு ஆகியோர் தலைவர்களாகவும், இலங்கைப் பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் பொதுச் செயலாளர் ​ெடாக்டர் கல்பனா சந்திரசேகர், நிர்வாகக்குழு உறுப்பினர்களான ​ெடாக்டர் சிராந்தி விஜேசுந்தர,டொக்டர் கே.டி.என் ஹர்சனி ஆகியோர் அறிக்கையாளர்களாகவும் செயற்பட்ட மூன்று ஆய்வரங்குகளில் பதினொரு ஆளுமை ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு விவாதிக்கப்பட்டன.

இவ்வாய்வரங்கின் சிறந்த ஆய்வுக்கான விருதினை டொக்டர் உதய கப்ரால், சிறந்த அளிக்கையாளருக்கான விருதினை திருமதி எம். பி ராஜபக்ஷ ஆகியோர் கைப்பற்றினர்.

மாநாட்டு ஆய்வு நூலானது வெளியீட்டுக் குழு அங்கத்தவர்களான டொக்டர் சிராந்தி விஜயசுந்தர, டொக்டர் கே. டி. என.; ஹர்சனி ஆகியோரால் பிரதம அதிதி, கௌரவ அதிதி ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

வரலாற்றுச்சிறப்புமிக்க இச்சர்வதேச ஆய்வு மாநாட்டின் இணைச்செயலாளர்களாக ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களின் சிரேஷ்ட உதவி நூலகர்களான டொக்டர் மனோஜா சமரதிவாகர, டொக்டர் மஞ்சுள விஜேசுந்தர ஆகியோரும், இயங்குநிலைக் குழுவினர்களாக சகல நிர்வாகக் குழு அங்கத்தவர்களும் செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...