பாபா குருநானக்கின் பிறந்தநாளை முன்னிட்டு சீக்கிய யாத்திரிகர்களுக்கு பாகிஸ்தான் வீசா

பாபா குரு நானக்கின் பிறந்தநாள் நிகழ்வையொட்டி, பாகிஸ்தானில் நவம்பர் 06ம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள இந்தியாவின் சீக்கிய யாத்திரிகர்களுக்கு 2,942 வீசாக்களை புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் வழங்கியுள்ளது.

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

1974 ஆம் ஆண்டின் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான பாகிஸ்தான் - இந்தியா விதி முறைகளின் கீழ் வீசா வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய யாத்திரிகள் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்வுகளைக் காண பாகிஸ்தானுக்கு வருகை தருகிறார்கள்.

மேலும், இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் பிற நாடுகளில் உள்ள சீக்கிய யாத்திரிகர்களுக்கும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க வீசா வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

புனித வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதிலும், வருகை தரும் யாத்திரிகர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதிலும் பாகிஸ்தான் பெருமை கொள்வதாக, இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலாயம் தெரிவித்துள்ளது.

யாத்திரிகர்கள், தேரா சாஹிப், பஞ்சா சாஹிப், நங்கனா சாஹிப் மற்றும் கர்தார்பூர் சாஹிப் ஆகிய இடங்களை தரிசிக்கலாம். யாத்திரிகர்கள் நவம்பர் 06ம் திகதி பாகிஸ்தானுக்குள் பிரவேசித்து நவம்பர் 15ம் திகதி அன்று இந்தியா திரும்புவார்கள்.


Add new comment

Or log in with...