- 2023 பட்ஜட் விவாதத்திற்கான நிகழ்ச்சிநிரலுக்கு அனுமதி
- ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் அதன் நிர்வாகக் கம்பனி மீள்கட்டமைப்பு
- இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 8 தீர்மானங்கள்
அவசர மருத்துவ தேவைக்களுக்கு அல்லது அரசின் அவசர பணிகளுக்கான சந்தர்ப்பங்கள் தவிர்ந்த, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் கூடுகின்ற தினங்களிலும் மற்றும் வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறுகின்ற காலப்பகுதியிலும் வெளிநாடுகளுக்கு செல்லல் ஆகாது என பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற (31) அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு
2. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பனி மற்றும் அதன் நிர்வாகக் கம்பனியை மீள்கட்டமைத்தல்
வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பெறுகைச் செயன்முறையின் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்களவு பங்குகள் மற்றும் நிறுவன முகாமைத்துவத்தை ஒப்படைப்பதன் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பனி மற்றும் அதன் நிர்வாகக் கம்பனியை மீள்கட்டமைத்தல் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பனியின் மீள்கட்டமைக்கப்பட வேண்டிய பொறிமுறை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கின்ற பணி நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சியாண்மை மீள்கட்டமைப்பு அலகுக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
3. வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற விவாதத்திற்கான நிகழ்ச்சிநிரல் – 2023
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற விவாதத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள கீழ்க்காணும் நிகழ்ச்சிகள் பிரதமர் அமைச்சரவையின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிகழ்ச்சிகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
- வரவு செலவுத்திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டம் இரண்டாம் முறை வாசிப்பு) : 2022.11.14
- வரவு செலவுத்திட்ட இரண்டாம் முறை வாசிப்புக்கான விவாதம் : 2022.11.15 தொடக்கம் 2022.11.22 வரைக்கும் (07 நாட்கள்)
- வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் : 2022.11.23 தொடக்கம் 2022.12.08 வரை (13 நாட்கள்)
- வாக்கெடுப்பு : 2022.12.08
4. நிதி ஆணைக்குழுவால் 2023 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கின்ற விதப்புரைகள்
இலங்கையின் அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் நிதி ஆணைக்குழு 2023 நிதியாண்டுக்கான விதப்புரைகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை கவனத்தில் கொண்டு, நிதி ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான படிமுறைகளை மேற்கொள்வதற்கும், அரசியலமைப்பின் 154 z (7) உறுப்புரையின் பிரகாரம் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
5. 2022 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட கடன்பெறும் எல்லையை திருத்தம் செய்வதற்கான சட்டமூலம்
2022 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன்பெறும் எல்லையை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.10.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
6. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
i. 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட 05 வர்த்தமானி அறிவித்தல்கள்
ii. 962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறைவரிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2 ஆம் உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 02 வர்த்தமானி அறிவித்தல்கள்
iii. 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 14 ஆம் உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட 02 வர்த்தமானி அறிவித்தல்கள்
V. 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3 ஆம் உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட 02 வர்த்தமானி அறிவித்தல்கள், மற்றும்
Vi. 2005 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டத்தின் 2அ உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட 01 வர்த்தமானி அறிவித்தல்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது வருடாந்த மாநாடு
2022.09.29 அன்று பிலிப்பைன் மணிலா நகரில் இடம்பெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி கலந்து கொண்டதுடன், குறித்த வங்கியின் நிர்வாக சபையில் இலங்கை ஓர் பிரதிநிதியாக ஜனாதிபதி மாநாட்டின் வணிகம் தொடர்பான கூட்டத்தொடரில் தலைமைதாங்கி ஆற்றிய உரையில் எடுத்துக்கூறிய விடயங்கள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மற்றும் ஜப்பான் நிதி அமைச்சர் மற்றும் பிலிப்பைன் குடியரசு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்கள் தொடர்பாகவும் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களை அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
8. ரத்னதிஸ்ஸ சமாதான மன்றம் (தாபித்தல்) சட்டமூலம்
கல்கமுவ, பாலுகடவல ஸ்ரீ வாபிகாராமய விகாராதிபதி எரியாவ ரத்னதிஸ்ஸ தேரர் பணிப்பாளராகப் பதவி வகிக்கும் ரத்னதிஸ்ஸ சமாதான மன்றம் (தாபித்தல்) சட்டமூலம் தனியார் உறுப்பினர் பிரேரணையாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யூ.கே. சுமித் உடுகும்புரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள் 52(06) இன் ஏற்பாடுகளுக்கமைய விடயதான அமைச்சராக குறித்த சட்டமூலம் தொடர்பாக அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்பதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை பரிந்துரைத்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Add new comment