சமூக சமையலறை திட்டத்தில் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைவு

உணவு கிடைப்பதில் சிரமத்திற்கு உள்ளாகும் இந்நாட்டு பிரஜைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'சமூக சமையலறை' திட்டத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைந்து கொண்டது.

இராஜகிரிய சனசமூக சேவை நிலையத்தில் நடத்தப்பட்டு வருகின்ற சமூக சமையலறை வேலைத்திட்டத்துடன், நேற்று (28) ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊழியர்கள் இணைந்து சமைத்த மதிய உணவை விநியோகித்ததுடன், 400 பேருக்கும் மேற்பட்டோர் சமூக சமையலறையிலிருந்து மதிய உணவை பெற்றுக் கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நலன்புரிச் சங்கம் இதற்கான நிதி வசதிகளை வழங்கியதுடன், சமூக சமையலறைக் கருத்தை அரச மற்றும் தனியார் நிறுவன மட்டத்தில் பரப்புவதே இதன் நோக்கமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைய உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி கேந்திரநிலையங்களை வலுவூட்டுவதற்காக பல் துறை கூட்டுப் பொறிமுறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சமூக சமையலறைத் திட்டம் தொடர்பில் சமூகத்தில் பரந்த கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டது.

சமூக சமையலறை கருத்தின் நோக்கம் வரவிருக்கும் உணவு நெருக்கடிக்கு தயாராவதும், ஒரு குழுவாக சத்தான ஒரு வேளை உணவை தயார் செய்வதும், உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பதும் ஆகும்.

இந்நிகழ்வில், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சுதீர நிலங்க விதான, ஆசிரியர் பீடப் பணிப்பாளர் பியசேன திஸாநாயக்க, புகைப்படப் பணிப்பாளர் மீஷா குணவர்தன, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நலன்புரி மற்றும் விளையாட்டு சங்கத்தின் தலைவி, பிரதிப் பணிப்பாளர் தீப்தி பிரமிதா உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பணிக்குழாமினரும் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...