ஒரு வாரத்திற்குள் பிரிட்டனின் புதிய பிரதமரைத் தேர்வு செய்யப் போட்டி

முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் போட்டியிட வாய்ப்பு

பிரிட்டனில் குறுகிய காலம் பிரதமர் பதவி வகித்தவராக 45 நாட்களுக்குள் லிஸ் டிரஸ் பதவி விலகிய நிலையில் ஒரு வாரத்திற்குள் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் பூர்த்தி செய்யப்பட்டு புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் பெரும் பிளவு வெடித்திருக்கும் சூழலில் புதிய தலைமைக்கான தெளிவான வேட்பாளர்கள் இல்லாமல் உள்ளது.

நாடு பெரும் பொருளாதார பின்னடைவை நோக்கிச் செல்லும் நிலையில் தேர்வாகும் புதிய தலைவர் அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி உள்ளார்.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சுவெல்லா பிரவர்மன் பதவி விலகி ஆளும் கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்ததை அடுத்தே டிரஸ் கடந்த வியாழக்கிழமை (20) திடீரென இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் பிரிட்டனில் அடுத்த பிரதமர் யார் என்பது பற்றி குழப்ப சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆளும் கன்சர்வேட்டி கட்சி தலைவராக தேர்வு செய்யப்படுபவரே அடுத்த பிரதமராக வர முடியும் என்ற நிலையில் அதற்கான வேட்பு மனுக்கள் ஏற்பது வரும் திங்கட்கிழமை நண்பகலுடன் முடிவுக்கு வரவுள்ளது.

பாராளுமன்றத்தில் தற்போது 357 உறுப்பினர்களை பெற்றிருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவராக வருபவர் குறைந்தது 100 எம்.பிக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஜெரேமி ஹண்ட் தலைமைக்கு போட்டியிடுவதில்லை என்று கூறியிருக்கும் நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அதிகம் உள்ளது. கடந்த முறை தலைமை போட்டியில் அவர் இறுதி வாக்கெடுப்பு வரை முன்னேற்றம் கண்டே டிரஸிடம் தோல்வி அடைந்தார். இதேநேரம் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் தவிர கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பென்னி மார்டண்ட், பாதுகாப்புத்துறை செயலாளர் பென் வாலஸ் ஆகியோரும் பிரதமர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.

எனவே வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியான பின்னரே, வெற்றி வாய்ப்புகளை கணிக்கும் சாத்தியங்கள் ஏற்படும்.

கட்சியின் தேர்தலில் வெல்லும் போட்டியாளர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ஆவார். அவரிடம் ஆட்சியமைக்க பிரிட்டிஷ் அரசர் அழைப்பு விடுப்பார்.

எனினும் டிரஸின் இராஜினாமா உரையை அடுத்து உடன் பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என்று லேபர் கட்சித் தலைவர் சேர் கீர் ஸ்டாமர் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. 12 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்குப் பின்னர், இந்த சுழல் கதவு போன்ற குழப்ப நிலைக்குப் பதிலாக நல்ல ஆட்சியைப் பெறும் தகுதி பிரிட்டன் மக்களுக்கு உண்டு என்று ஸ்டாமர் கூறினார்.

ஜனவரி 2025இல் தான் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒருவேளை புதிய பிரதமர் விரும்பினால், பொதுத்தேர்தல் நடைபெறலாம்.

லிஸ் டிரஸ்ஸின் நிதியமைச்சரான க்வாசி க்வார்ட்டெங் கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி ஒரு மினி பட்ஜெட்டை அறிவித்தார். இந்த பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்ட் அளவுக்கு வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டது.

இதனால், பங்குச் சந்தை தடுமாறியது. இந்த மினி பட்ஜெட் பிரிட்டனில் நம்பிக்கையை குலைத்த காரணத்தால், டொலருக்கு எதிராக பிரிட்டிஷ் பவுண்ட் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இதையடுத்து, வருமான வரியை குறைப்பதற்கு மேற்கொண்ட தமது முடிவை கைவிடுவது என பிரதமர் லிஸ் டிரஸ்ஸும், நிதியமைச்சர் க்வாசி க்வார்ட்டெங்கும் முடிவு செய்தனர். இந்தக் குழப்பமே டிரஸ் மீது தமது சொந்தக் கட்சிக்குள் எதிர்ப்பு வலுக்கக் காரணமானது. டிரஸின் பதவி விலகலுடன் கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த நான்கு ஆண்டுகளில் நான்காவது ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...