இறக்குமதி சோள விதைகளை வழங்குவதில் தாமதம்; உடன் தலையிட்டு தீர்வு காணவும்

- பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சோள விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உடனடியாக தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கினார்.

ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தேசிய வழிநடத்தல் குழுவின் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று (13) அன்று அலரி மாளிகையில் நடைபெற்றபோதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கினார்.

17 நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான சவால்கள் குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் சுகாதாரத் துறை மற்றும் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு மேலதிகமாக, வறுமைப் பிரச்சினையை மீளாய்வு செய்தல், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அதிக கவனம்செலுத்துதல், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தியை மேம்படுத்துதல், காலநிலை மாற்றத்தின் சவால்களை முறியடித்தல், நீர் முகமைத்துவம் உள்ளிட்ட முக்கியமான துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களால் தீவிரமடைந்து வரும் போசாக்கு குறைபாடு குறித்தும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், திரிபோஷா உற்பத்தி குறைவதற்குக் காரணமாக அமைந்துள்ள சோள உற்பத்தி குறைவடைந்தமைக்கு, துறைமுக தாவர தனிமைப்படுத்தல் பிரிவின் ஊடாக, இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சோள விதைகளை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது சுட்டிக் காட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவர்கள், சோள விதைகளில் அஃப்லடொக்சின் கலந்துள்ளதாக வதந்திகள் பரவி வருவதனால் உரிய அதிகாரிகள் பாதுகாப்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் காரணமாக விதைகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

இது தொடர்பில் உடனடியாக தலையிட்டு விசாரித்தறியுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை விடுவிப்பதில் தடை ஏதும் இருப்பின் அது குறித்து ஜனாதிபதிக்கோ அல்லது தமக்கோ அறிவித்திருக்கலாம் எனவும், விதைகளை விடுவிப்பதை தாமதப்படுத்துவதற்கு முன்னர், எந்த சர்வதேச தரங்களுக்கமைய அந்த விதைகள் பரிசோதிக்கப்பட்டன என்பதை அறிவித்திருக்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

நிலையான அபிவிருத்தி இலக்குகளில் உள்ளடக்கப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், மிகச்சிறிய விடயங்கள் தொடர்பாக உள்ள வழக்குகளை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்லுதலானது, நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும் எனவும், இது மக்களுக்கு தேவையற்ற பிரச்சினையையும் அநாவசியமான செலவுகளையும் ஏற்படுத்துகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

சுற்றறிக்கைகளுக்கு மட்டுப்படுத்தாமல், அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் குறித்து அரசாங்க அதிகாரிகள் அறிவுறுத்தப்படல் வேண்டும். சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் இலக்குகளை அடைவதற்கான முயற்சியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை ஆராய்ந்து, கிராம மட்டத்தில் இருந்து அனைத்து நிறுவனங்களும் மேல்நோக்கி பயணிப்பதற்கு, ஒற்றுமையுடன் செயற்படுவதற்கான வழிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் திரு.சரத் டேஷ், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கை இதுவரையில் அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்ததுடன், இது தொடர்பில் இலங்கைக்கு தேவையான ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

2023 மற்றும் 2027 க்கு இடையில் இலங்கையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு 385 மில்லியன் டொலர்களை செலவிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு எவ்வளவு பங்களிப்பு வழங்கப்படுகின்றன என்பது குறித்த அறிக்கைகளை ஒவ்வொரு அமைச்சும் பேணிச்செல்ல வேண்டும் எனவும், நிலையான அபிவிருத்தித் திட்ட இலக்குகளுக்கு 2023 வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும், இந்த தேசிய வழிநடத்தல் குழு கூட்டத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பிரதமரின் செயலாளர் திரு. அனுர திஸாநாயக்க மற்றும் அமைச்சு செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...