தேசிய பேரவை பொருளாதார ஸ்திரத்தன்மை உப குழு தலைவராக சம்பிக்க ரணவக

- வஜிர அபேவர்தன முன்மொழிவு; மனோ கணேசன் வழி மொழிவு

தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான உப குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக இன்று (07) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற உபகுழுவின் முதலாவது கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உபகுழுவின் தலைவர் பதவிக்கு  சம்பிக்க ரணவகவின் பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் இதனை வழிமொழிந்தார்.

தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தால், பால் உற்பத்தியை உயர்த்துதல், கைத்தொழில் துறையை மறுசீரமைத்தல், உர உற்பத்தி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் போன்றவற்றில் புதிய யோசனைகளைக் கொண்டுவருதல் போன்ற நாட்டின் எதிர்காலத்தைப் பலப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவக்கைகள் குறித்து உபகுழுவின் உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி அந்தந்தத் துறைகள் குறித்த பொருளாதார ஊக்குவிப்பு முன்மொழிவுகள் உள்ளடங்கிய அறிக்கையொன்றை எதிர்வரும் 20ஆம் திகதி தேசிய பேரவையில் சமர்ப்பிக்க உறுப்பினர்கள் இணங்கினர்.

இதற்கமைய அந்நியச் செலாவணிப் பிரச்சினை, கடன் மறுசீரமைப்புப் போன்ற விடயங்கள் குறித்து நிபுணர்கள் மற்றும் மத்திய வங்கி, நிதி அமைச்சின் அதிகாரிகளை எதிர்வரும் 13ஆம் திகதி குழுவின் முன்னிலையில் அழைத்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளவும் இங்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அத்துடன், உணவு, சகாதாரம், போக்குவரத்து, வலுசக்தி உள்ளிட்ட துறைகளின் நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதிர்வரும் 14ஆம் திகதி குழு முன்னிலையில் அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான உபகுழுவின் கூட்டத்தை எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் கூட்டுவதற்கும் உறுப்பினர்கள் இணங்கினர்.

இன்றைய கூட்டத்தில் அமைச்சர் நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜெயகொடி, சிவநேசதுறை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, எம்.ராமேஸ்வரன், மனோ கணேஷன், ஏ.எல்.எம்.அதாவுல்லா, ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி.கே ஜயதிலக ஆகியோர் கலந்துகொண்டனர். 


Add new comment

Or log in with...