ஆயுட்காலத்தின் பெறுமதி உணர்வோம்

'அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான். உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களை சோதிக்கும் பொருட்டு.

(அல் குர்ஆன் 67:2)

'எதற்காகவெனில் உங்களில் யார் நற்செயல் புரியக்கூடியவர் என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக...

(அல் குர்ஆன் 11:07)

'இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களைச் சோதிப்பதற்காக... '

(அல் குர்ஆன் 18:07)

மனிதர்களில் எல்லோரும் ஏதாவதொரு செயலைச் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் அனைத்து செயலும் நற்செயலா? மிகச் சிறந்த செயலா? மிகச் சிறந்த முறையில் பணியாற்றுபவர் யார்? என்பதைச் சோதிப்பதற்காகவே உங்களைப் படைத்திருக்கின்றோம் என்பதை அல்லாஹ் கூறி வைத்திருக்கின்றான்.

செயல்கள் எவ்வாறு தரத்துடன் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறதோ, அவ்வாறே ஆயுட்காலமும் பிறருக்கு பயனளிக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்று விரும்புகிறது. நீண்ட நாட்கள் வாழ்வதல்ல நோக்கம். மாறாக எவ்வாறு வாழ்வு காலத்தைக் கழித்தான் என்றுதான் இங்கு கவனிக்கப்படுகின்றது.

எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதையே அல்லாஹ் கவனிக்கின்றான்.

ஸஹாபியான ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள், 30வது வயதில் இஸ்லாத்தை ஏற்றார்கள். 37வது வயதில் வபாத்தானர்கள். அவர் முஸ்லிமாக வாழ்ந்த காலம் வெறும் ஏழு வருடங்கள் தான். ஆனால் அவர் வபாத்தான போது நபி (ஸல்) அவர்கள், ஸஅத் வபாத்தாகி விட்டார்.

அவரது மரணத்தினால் அல்லாஹ்வின் அர்ஷ் எனும் சிம்மாசனம் குலுங்கியது. அவரது ஜனாஸா தொழுகையில் இதுவரை கலந்து கொள்ளாதளவுக்கு எழுபதினாயிரம் வானவர்கள் விண்ணிலிருந்து இறங்கி கலந்து கொண்டுள்ளார்கள்.

ஏழே ஏழு ஆண்டுகள் இறைவிசுவாசியாக வாழ்ந்த ஒரு மனிதரின் மரணத்திற்காக அல்லாஹ்வின் சிம்மாசனம் குலுங்கியது என்றால் அவர், எவ்வாறு தம் வாழ்வை அமைத்துக் கொண்டிருந்திருப்பார் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அதனால் அல்லாஹ்வின் விருப்பதற்கு ஏற்ப நபிகளாரின் வழிகாட்டல்கள் படி வாழ்வை அமைத்துக் கொள்வோம்.

தொகுப்பு: அபூஸப்வான் உமைர்


Add new comment

Or log in with...