அகிலத்தாருக்கான அருட்கொடை

ரபீஉனில் அவ்வல் மாதம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதமாகும். இது ஸபர் மாதத்தை அடுத்து வரக்கூடியது. 'ரபீஉனில் அவ்வல்' என்ற வார்த்தையின் அர்த்தம் 'முதல் வசந்தம்' என்பதாகும்.

ரபீஉனில் அவ்வல் மாதம் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மாதமாக விளங்குகிறது. ஏனெனில் இம்மாதத்தில் தான் இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்தார்கள். அதன் ஊடாக மனித குலம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அல்லாஹ்தஆலா தன் அருள்மறையில் '(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு ரஹ்மத்தாகவே (ஓர் அருட்கொடையாகவே) அன்றி அனுப்பவில்லை.' (அல்-அன்பியா: 107) என்றும் 'இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் நன்மாராயங் கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவுமே அன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.' (ஸபா: 28) என்றும் வெவ்வேறு அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ளான்.

இதன்படி, அல்லாஹ்தஆலா நபி(ஸல்) அவர்களை உலகத்தாருக்கே அருட்கொடையாக அனுப்பி வைத்திருக்கின்றான். மாறாக முஸ்லிம்களுக்கு மாத்திரம் அனுப்பப்பட்டுள்ள இறைத்தூதரல்ல முஹம்மத் (ஸல்) அவர்கள். அன்னார் இரக்கம், தயவு மற்றும் மென்மையுடையவர்களாக இருந்தார்கள். அவற்றுக்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள்.

அந்த வகையில் தான் நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை 'மக்கள்மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்' என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி)

நபி(ஸல்) அவர்களின் கருணை சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் கிடைக்கப்பெற்றது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகளுக்கும் உயிரற்ற பொருட்களுக்கும் கூட அவர்களது கருணை சென்றடைந்தது. நபி (ஸல்) அவர்களது வாழ்க்கையில் கருணைக்கான சான்றுகள் நிறைந்தே காணப்படுகின்றன.

இவ்வாறு மகத்துவம் மிக்க நற்பண்புகளைக் கொண்டிருந்த அண்ணலார் பிறந்த மாதமே ரபீஉனில் அவ்வல் மாதம் என்றால் அது மிகையாகாது.

 

 


Add new comment

Or log in with...