தென்னாபிரிக்கா ஆறுதல் வெற்றி

ரில்லி ரொசோவின் அபார சதத்துடன் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ரி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றிய நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 3ஆவது ரி20இல் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணிக்கு ரொசோவ் 48 பந்துகளில் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களை பெற்றார். அவர் குவன்டம் டி கொக்குடன் (68) இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 90 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். இதன்மூலம் தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களை குவித்தது.

இது அவருக்கு முதல் சர்வதேச டி20 சதம் ஆகும். மொத்தம் அவர் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விரட்டினார். டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய 5ஆவது தென்னாபிரிக்க வீரர் என்ற சாதனையை ரோஸோவ் படைத்தார்.

டி கொக் 68 ஓட்டங்கள் விளாசியதன் மூலம், இந்திய அணிக்கு எதிராக அதிக அரைசதங்கள் (4) அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்தார். அதேபோன்று 2000 ஓட்டங்கள் மைல்கல்லை கடந்த 2ஆவது தென்னாபிரிக்க வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். தொடர்ந்து பதிலெடுத்தாட வந்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் 18.3 ஓவர்களில் 178 ஓட்டங்களுக்கு சுருண்டது.


Add new comment

Or log in with...