ரி20 உலகக் கிண்ணத்தில் ரஞ்சன் மடுகல்ல, தர்மசேன

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான நடுவர்கள் மற்றும் மத்தியஸ்தர்களின் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் வெளியிட்டுள்ளது.

இந்தப் போட்டிகளுக்கான 16 நடுவர்கள் மற்றும் 4 மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு அதில் இலங்கையைச் சேர்ந்த நடுவர் குமார் தர்மசேன மற்றும் போட்டி மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்ல இடம்பெற்றுள்ளனர்.

இந்த நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்கள் தொடர்பில் கூறும் ஐ.சி.சி, “போட்டித் தொடர் முழுவதும் 16 நடுவர்கள் போட்டிகளில் நடுவர்களாக பணியாற்ற தயாராகி உள்ளதோடு 2021 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடுவராக இருந்த குமார் தர்மசேன, ரிச்சர்ட் கெட்டில்பிரோ மற்றும் மரைஸ் எரஸ்முஸ் ஆகிய நடுவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தது.

சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் போட்டி மத்தியஸ்தர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் மடுகல்ல இம்முறை போட்டியில் மத்தியஸ்தராக செயற்படவிருப்பதோடு அவர் தவிர ஏனைய மத்தியஸ்தர்களாக அன்ட்ரூ பைக்ரொப்ட், கிறிஸ்டோபர் பிரோட் மற்றும் டேவிட் பூன் செயற்படவுள்ளனர்.

ரி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டி வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு அந்தப் போட்டியின் நடுவர்களாக ஜோல் வில்சன் மற்றும் ரொட்னி டக்கர் செயற்படவுள்ளனர். அந்த போட்டியின் தொலைக்காட்சி நடுவராக போல் ரைபல் செயற்படவுள்ளார்.

“இந்த நடுவர்கள் ஆரம்பச் சுற்று மற்றும் சுப்பர் 12 சுற்று போட்டிகளுக்காக பெயரிடப்பட்டிருப்பதோடு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான நடுவர்கள் போட்டியின் இடையே பெயரிடப்படவுள்ளனர்” என்று ஐ.சி.சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...