மகளிர் ரி20 உலகக் கிண்ணம்; போட்டி அட்டவணை வெளியீடு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 10 அணிகள் பங்கெடுக்கும் இந்த மகளிர் ரி20 உலகக் கிண்ணத் தொடர் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு 8 அணிகள் நேரடித் தகுதி பெற்ற நிலையில், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் தகுதிகாண் போட்டிகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தொடரின் முதல் போட்டி 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இலங்கை மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகள் இடையில் நடைபெறுகிறது.

அதேநேரம் இந்த தொடரில் பங்கெடுக்கும் அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெறவுள்ளதோடு குழு 1இல் இலங்கை, பங்களாதேஷ், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஐந்து தடவை உலகக் கிண்ணம் வென்ற தொடரின் நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலியா இடம்பெற்றுள்ளன.

அதேவேளை குழு 2இல் அயர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகள் 2023ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதோடு, குழுநிலைப் போட்டிகளில் ஒவ்வொரு குழுவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கும், இறுதிப் போட்டியிலும் ஆடும் சந்தர்ப்பத்தினை பெறவுள்ளன. தொடரின் இறுதிப் போட்டி 2023ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...