வாசிப்பு மனிதனை முழுமைப்படுத்தும்; 'தேசிய வாசிப்பு மாதம் - ஒக்டோபர்'

உலக விரிவாக்கலுக்குள் நின்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவும் மேம்பாடடையவும் வைக்கும் உன்னத சாதனம் வாசிப்பாகும். ஒரு மனிதன் உண்பதைப் போன்று வேறு கருமங்களை ஆற்றுவதனைப் போன்று வாசிப்பென்பது அன்றாட கடமைகளில் ஒன்றாக மாறும் போதே அவன் உயிருள்ளவனாகவும் மாறுகின்றான். தெரிந்தவற்றைக் கதைப்பதனை விட தெரிந்து கொண்டு பேசுகின்றவனே அறிவாளியாகின்றான். இவ்வாறான புடம் போடலுக்கு அவனைத் தூண்டுகின்ற திருப்திகரமான உணர்வு நிலைச் சாதனம் வாசிப்பே அன்றி வேறில்லை.

வாசிப்பானது பாடசாலைப் பருவத்திலிருந்து விதைக்கப்பட வேண்டிய உணர்வாகும். இதனால் தான் ஒக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாகக் கல்வியமைச்சு பிரகடனம் செய்து பல்வேறு செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது. தேசிய நூலகம் மற்றும் ஆவணச்சேவைகள் சபை பாடசாலை மட்டத்தில் வாசிப்பின் விருத்திக்கென வருடாவருடம் பல்வேறு செயற்றிட்டங்களை ஊக்குவித்து வருகின்றது. அந்த வகையில். 'நூலகமும் ஒரு ஆசிரியரே' எனும் கருப்பொருளில் இவ்வருடத்திற்கான வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபரின் பொறுப்புடன் பெற்றோருக்கு பொருளாதாரச் சுமையினை ஏற்படுத்தாத வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பிறந்த நாள் பரிசாக நூல்களை அன்பளிப்புச் செய்தல், புத்தகக் கண்காட்சியை நடத்துதல், புத்தக நன்கொடை தினமொன்றை அறிமுகம் செய்தல், வாசிப்பின் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கிலான போட்டிகளையும் விரிவுரைகளையும் ஏற்படுத்துதல், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல், வாசிப்பு முகாம்களை ஒழுங்குபடுத்தல், வாசிப்பு முகாம்களை நடத்துதல், ஒக்டோபர் 25 ஆம் திகதியை நூலக தினமாகப் பயன்படுத்துதல் என்பன கல்வியமைச்சினால் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள முன்னெடுப்புக்களாகும்.

'கருவுற்றிருக்கும் தாய் நல்ல நூல்களை வாசிக்கும் போது அக் குழந்தைகளின் மூளை விருத்தி உந்தப்படுகின்றது' என்கின்ற உளவியலாளர்களின் கூற்றினையும் 'குழந்தையின் முதல் ஆசான் தாய். அக் குழந்தை தாலாட்டிலிருந்தே கற்கவும் அறியவும் ஆரம்பிக்கிறது' என்கின்ற இலக்கிய ஆய்வாளர் தமிழ் அண்ணலின் கூற்றினையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது வாசிப்புக்கான கரு வீட்டிலிருந்தே விதைக்கப்பட வேண்டுமென்பது தெளிவாகின்றன. அதற்கான சூழல் அங்கு கிடைக்காத போது ஒரு குழந்தையின் புகுந்த வீடாக அடையாளம் காணப்பட்டுள்ள பாடசாலையின் மூலமே இதனைக் கட்டியெழுப்புவதற்கான சாத்தியப்பாட்டு நகர்வுகளை அதிகரிக்க வேண்டிய தேவையுண்டு. அதற்கான மிக நல்லதொரு களத்தை வழங்குவது பாடசாலைகளின் நூலங்களே. அந்நூலங்களை வளப்படுத்துவதுதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான பங்காளிகளாக மாற வேண்டியவர்கள் மாணவர்களே. பாடசாலைப் பரீட்சைக் கல்வியோடு மட்டுப்பட்டு விடுகின்ற மாணவர்களை விட நூலகங்களை சிறுபராயம் முதலே வசமாக்கி மேன்மையடைந்த மாணவர்களே சமூக மதிப்புமிக்க அடையாளங்களாக சமூகத்தில் திகழ்வதே வரலாறாகும்.

வாசிப்பின் மூலம் சிந்தித்தல், ஆராய்தல், காரணம் கண்டறிதல், கற்பனை செயதல் முதலிய திறன்கள் வளருகின்றன. ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் பொழுதை திருப்திகரமாகப் போக்குவதற்கும் வாசிப்பு துணை நிற்கிறது. மகிழ்ச்சியாக உள்ளவனே சுயமாக சிந்திக்கும், ஆராயும், கருத்துக்களை வெளியிடும் நிலையில் எப்போதும் தன்னை வைத்திருப்பான். அவனே சமூகத்தின் பார்வைக்குட்பட்டவனாக மாறுகின்றான். ஆங்கிலத்தில் 'Read for fun, Read for pleasure' என்றெல்லாம் கூறப்படுவது நினைவு கொள்ளக் கூடிய செய்திகளாகும்.

வாசிப்பின் மூலம் தகவல் தேவைகள் நிறைவு செய்யப்படுவதுடன் அறிவு மேலோங்குகிறது. அறிவாளியையும் அறிவிலியையும் வேறுபடுத்துவது வாசிப்பேயாகும். கோபம், பயம், விரக்தி உள்ளிட்ட உளரீதியான பாதிப்புக்களிலிருந்து வாசிப்பு பாதுகாப்பு அளிக்கின்றது. மொழி விருத்தி அடைவதுடன் தன்னம்பிக்கை வளர்கிறது. ஞாபக சக்தி விருத்தி பெற்று, கௌரவம் உயர்ந்து, தொழிலில் தேர்ச்சி அடைந்து, பல்துறை ஆளுமையுள்ள மனிதனாகத் தன்னை அடையாளப்படுத்த வாசிப்பே வழிகோலுகிறது.

மரணித்த பின்னரும் ஒரு மனிதனுடன் உறவாடவும் தர்க்கிக்கவும் அவனை ஆய்வு செய்யவும் முடியுமான சந்தர்ப்பத்தை வழங்குவது வாசிப்பேயாகும். 'பழங்கால புருஷர்களை நேரில் சந்திக்க வேண்டுமானால், அவர்களோடு உரையாட வேண்டுமானால் நூலகங்களுக்குப் போ' என அக்கருத்துக்கு வலிமை சேர்கிறார் மாஓசேதுங்.

மகாத்மா காந்தியிடம் 'உங்களிடம் ஒரு கோடி ரூபாய் தரப்பட்டால் என்ன செய்வீர்கள்' எனக் கேட்ட போது 'ஒரு நூலகம் அமைப்பேன்' எனக் கூறியமை நூலகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவல்ல அம்சமாகும்.

'புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் நூலகங்களே' என்கிறார் லெனின். 'வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தகங்களை வாசிக்க அனுமதியுங்கள்' என்றார் நெல்சன் மண்டேலா.

இவ்வாறாக, பெரும் அறிஞர்களும் போராட்டகாரர்களும் கூட புத்தக வாசிப்பினையும் நூலகங்களையும் பற்றியே பிரஸ்தாபித்துள்ளனர். அவர்கள் வாசிப்பின் சுவையினை உணர்ந்ததன் வெளிப்பாடுகளே இவைகளாகும். இவற்றினாலேயே இவர்கள் காலம் கடந்தும் வாழுகின்றனர்.

வாசிப்பினை வழக்கமாக்க வீட்டுச் சூழலை வாசிப்பின் முற்றங்களாகவும் வாசிப்பின் முகாங்களாகவும் மாற்றியமைக்க வேண்டும். நவீன ஊடகங்களின் வருகையினால் வாசிப்புத்திறன் தூரமாகிச் செல்கிறது என்கின்ற கருத்தினையும் ஏற்காமல் இருக்க முடியாது. எனினும் அதனை மிகைக்க வேண்டுமாயின் முறையான-நேர்மையான-ஆழமான வாசிப்புக்கு வழிகாட்டும் நூல்களையும் அதன் உறைவிடமான நூலகங்களையும் நோக்கி மாணவர்கள் ஒவ்வொருவரும் நகர்வது அவசியம்.

ஜெஸ்மி எம்.மூஸா....

அல்-மனார் தேசிய பாடசாலை,

மருதமுனை.


Add new comment

Or log in with...