கோப், கோபா குழு உறுப்பினர் நியமனம் விடயத்தில் எனது தலையீடு கிடையாது

சர்ச்சைக்கு சபாநாயகர் முற்றுப்புள்ளி 

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான தீர்மானம் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது. தாம் அதில் தலையிடவில்லையென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.  

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. சுயாதீன தரப்பினருக்கு சபையில் உரையாற்றுவதற்கான உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் மாத்திரம் நான் தலையிட்டேன். 

எனினும் கோப் மற்றும் கோபா குழு உறுப்பினர் நியமனம் தொடர்பான தீர்மானம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டதேயன்றி நான் அதில் தலையிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

அரச பொது நிறுவனங்கள் பற்றிய குழுவுக்கான (கோப்) உறுப்பினர்கள் நியமனம் தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளிடையில் நேற்று சபையில் கடுமையான தர்க்கம் ஏற்பட்டதுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டன.  

அதே வேளை எதிர்க்கட்சிகள் தமக்குள்ளே முரண்பட்டுக்கொண்டதுடன் அரச தரப்பிலிருந்து வெளியேறி சுயாதீன எதிர்க்கட்சியாக செயற்படும் எம்.பி.க்கள் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு நியமிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டுகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன. 

ஏழு மூளை கொண்ட பூதம்,மூன்று தலைக் கழுதைகள், படிக்காத முட்டாள் போன்ற வார்த்தைப் பிரயோகங்களினால் சபை சுமார் அரைமணிநேரம் அமளி துமளியானது.  பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.அதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பணம்,வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெற்றன. அதன்பின் எழுந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ''கோப் குழு '' தொடர்பான கூற்றுக்களை சபையில் முன் வைத்தார். 

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு நாம் சபையிலும் சபைக்கு வெளியிலும் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தோம். அத்துடன் இந்த பதவிகளின் தலைமைப் பதவிகளுக்கு கபீர் ஹாசிம் மற்றும் இரான் விக்கிரமரத்ன ஆகியோரை பரிந்துரை செய்திருந்தோம்.  

அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதுடன் தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்த போது எமது கோரிக்கைக்கு சபையில் இணக்கம் தெரிவித்திருந்தார். 

எனினும் தற்போது அந்த குழுக்களுக்கான தலைவர் பதவி வேறு முறைமைகளில் வேறு நபர்களை நியமிக்கப்போவதாக தகவல் கிடைத்திருக்கின்றது. 

அதனால் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போயிருக்கி்ன்றது.  

எனவே அன்று பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மற்றும் சபாநாயகரும் வாக்குறுதி அளித்தபடி கோப் மற்றும் கோபா குழுங்களின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சபையில் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...