கோப் குழுவில் கலாநிதி ஹர்ஷவின் இடத்திற்கு பேராசிரியர் சரித்த ஹேரத்

- எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் அறிவிப்பு

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் (கோப்) முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத்தை, புதிய கோப் குழுவில் உறுப்பினராக நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்துள்ளார்.

இன்று (04) பாராளுமன்றத்தில் அவர் இதனை அறிவித்தார்.

 

 

தமது கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கோப் குழுவில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர், குறித்த இடத்திற்கு குழுவின் (கோப்) முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத்தை முன்மொழிவதாக குறிப்பிட்டார்.

நேற்றையதினம் (03) கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு தலா 27 எம்.பிக்களின் பெயர்களை சபாநாயகர் பெயர் குறித்து அறிவித்திருந்தார்.

குறித்த குழுக்களில் கோபா குழுவில் பேராசிரியர் சரித்த ஹேரத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், கோப் குழுவில் அவரது பெயர் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

இது தொடர்பில், பேராசிரியர் சரித்த ஹேரத், தனது ட்விட்டர் கணக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சாடி, பதிவொன்றை இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள எம்.பிக்களில் அதிகமானோரின் பெயர்கள், கோப் மற்றும் கோபா குழுக்களில் உள்வாங்கப்படவில்லையென இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது தயாசிறி ஜயசேகர, விமல் வீரவன்ச உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...