இந்தோனேஷியா கால்பந்து போட்டி வன்முறை; இதுவரை 174 பேர் மரணம்

- சொந்த மண்ணில் தோல்வியை தாங்க முடியாத வீரர்கள் அட்டகாசம்

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வன்முறையில் இது வரை 174 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 150 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், இந்தோனேசியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

 

 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்றிரவு (01) இடம்பெற்ற கால்பந்து போட்டித் தொடரின்,  Arema FC மற்றும் Persebaya Surabaya ஆகிய இரு அணிகளுக்கிடையிலான போட்டியில், இரு அணிகளின் இரசிகர்களும் ஆரம்பம் முதலே போட்டிகளை வெறித்தனமாக இரசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தோல்வியடைந்த அணி; பொறுக்க முடியாத இரசிகர்கள்; திணறிய பொலிஸ்
இப்போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர இரசிகர்கள், கடும் கோபமடைந்தனர். இதனையடுத்து மைதானத்துக்குள் குவிந்த இரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

இச்சந்தர்ப்பத்தில் களத்தில் இருந்த பல அரேமா வீரர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட இரசிகர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டனர். அப்போது நூற்றுக்கணக்கானோர் இந்த கண்ணீர்புகை குண்டுகளுக்கு இடையே சிக்கி மூச்சுவிட முடியாமல் திணறினர். மேலும் பல இடங்களில் பாதுகாப்பு படையினர் இரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் பல்வேறு வீடியோக்களில் காணக்கூடியதாக உள்ளது.

 

 

கால்பந்து இரசிகர்களின் இந்த ரகளை பெரும் ரணகளத்தை ஏற்படுத்திய நிலையில், இதன்போது இடம்பெற்ற நெரிசல் மற்றம் மோதல் சம்பவங்களில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்ததோடு, தற்போது வரை 174 கால்பந்து இரசிகர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதோடு, 34 பேர் மைதானத்திற்குள் உயிரிழந்துள்ளனர். ஏனையோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

படுகாயமடைந்த நிலையில் சுமார் 150 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்களை அடுத்து எஞ்சிய கால்பந்து போட்டிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...